Sunday, 1 May 2016

திருச்சாழல்ஞானப்பூங்கோதைக்கு  வயது  நாற்பது.


நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்
யாரைப்போல் இருப்பேனோ
நேற்று அவளை  நான்  பார்த்தேன்
பேருந்தின்  கடைசியில்  நின்றிருந்த
அந்தப் பெண்ணிற்கு  என் வயதிருக்கும்
அந்த நாசி,
அந்தக்கண்கள்,
கருங்கூந்தல்,
மாநிறம்,
சற்றே திமிரான பார்வை
வடிவான  தோற்றமென
நான் பெண்ணாய்ப் பிறந்தால்
வடிவெடுக்கும்  தோற்றம்  தான் அது.
இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்
பார்த்துக்கொண்டோம்
இரண்டொருமுறை  யதேச்சையாக இருவரும்
பார்ப்பதைத் தவிர்த்தோம்
இப்போது பேசும் தொலைவில் நிற்கும்  அவளிடம்
நீங்கள் இளங்கோவா என்றேன்
ஆமாம்  என்ற அவள்
நீங்கள்
ஞானப்பூங்கோதைதானே  என்றாள்.

திருச்சாழல்

1
தவிர நீ  யாரிடமும்  சொல்லாதே
பணியிடத்தில்  உள்ளவன்தான்
என்  வெளிர்நீல முன்றாமையால்  நெற்றியைத்
துடைப்பதுபோல்  அவனைக் காண்பேன்
அதுவல்ல என்துயரம்  நாளை  ஞாயிறென்றால்
இன்றேயென்  முன்றானை  நூறுமுறை
நெற்றிக்குப்  போவதுதான்  என்னேடி

தென்னவன்  திரும்பியிருப்போனோ  பிள்ளைகள்
வந்ததோ  உண்டதோவென  ஆயிரம்  கவலைகள்
உள்ளதுதான்
வாரத்தில்  ஞாயிறென்றால் ஒன்றே  தான  காண்
சாழலோ

2.
விண்முட்டும்  கோபுரத்தில்  இடை நிறுத்தி
தொடைகட்டும்  சிற்பம்  உண்டென்பான்
களிப்பூட்டும்  கதைகள் பல காண்போர்
அறியாமல்  சொல்லி  முடிப்பான்
நாளது முடிய  நேரம் நெருங்கும்
நாளை ஞாயிறல்ல  நானும் விடுப்பல்ல
என்பதோர் எண்ணம்  வந்து
மகிழ்வது  ஏனடியோ
அண்ணன்வர  எட்டாகும்  பிள்ளையொன்றுமில்லை
வீடுபோய்ச் சேர்ந்தாலும்  ஊணும் உறக்கமும்தான்
சொற்பமாய்ச்  சொன்னாலும் வீடு போல்
அற்பமாயில்லாமல் போனது  நம் புண்ணியம்தான்
நாள்தோறும்  ஞாயிறென்றால்  நம்பாடும்
நாய்பாடும்  போலாகும் காண் சாழலோ.

3.
பின்னலை முன்போட்டால் அழகென்பான்
மறுத்தும் இடையில்  சேலையைச்
சொருகினால்
கடுமையான வேலையொன்றைத்
தந்திடுவான்
பொந்தனைப்போல்  கள்ளமனம்கொண்ட
அவன்
கணவனல்ல
காலைமுதல்  மாலைவரை  களைத்தே
போவேன்
நாளையொரு நாள் விடுப்பெனக்
கேட்டாலும்
மனம் இங்கேயும்  உள்ளதுபோல் அங்கேயும்
உள்ளதுபோல் இருப்பது ஏனடியோ

விந்தைமனம் உனக்கும் எனக்கும்
பிணியென்று  கிடந்தாலும்  பணியிடம்
போவதை மறவோம்தான்  ஆனால்
நாளை ஞாயிறென்றும்  அறியாமல்
விடுப்புக்கோரி  விண்ணப்பித்தால் 
நகைப்பிற்கும்  நாம் ஆளாவோம்  காண்
சாழலோ


4.
திங்களொரு  நாள்  செவ்வாயொரு நாளும் போயிற்று
புதன் வந்ததும்  பொறுமையில்லை  எனக்கு
அவன் நலமோ அவன் மனை நலமோவென
நெஞ்சம்  பதைத்துப் போவதுதான் என்னேடி

பொல்லாத புதுநோய்  வந்ததைப் போல் வருந்தாதே
அலுவலிலும் அவனேதான் வீட்டினிலும்
அவனேதானென  பெண்ணொருத்திப் படும்
பெருந்துயர்ப்  போலல்ல  உன் துயரம்
என்றெண்ணிச்  சந்தோஷம்  காண் சாழலோ.

வம்ச கீர்த்தி

எனது தந்தையின்  பாட்டனார்
அமாவாசையன்று  பெய்த  மழையில்
மின்னலிடையே  பேயைக்
கண்டவரெனக் கீர்த்திபெற்றவர்
எனது பாட்டனாரோ  அமாவாசையன்று
பேயைக் காப்பாற்றியவரின் மகனென
அனைவராலும்  அறியப்பட்டார்
தந்தைக்கோ  அமாவாசையிலும் பௌர்ணமியிலும்
பேய் உச்சத்தில்  நின்று உக்கிரம்கொண்டதை
ஊரார்  பலவாறு  பேசினர்
கட்டிய  மனையாளுடன் சந்தைக்குப்போகும்போது
அமாவாசைக்கு வந்த  வாழ்வைப் பாரென
எகதாளம்  பேசுவோருக்குப்  பல்லிளித்தப்போகும்
எளியபுகழ்  என்னுடையது.


எங்காவது  கொடும்பாவி  கட்டியிழுத்தால்
கண்டிப்பாக உங்களை நினைப்பேன்


சுமைதாங்கிக் கற்களை  ஆலமரங்களை
குளக்கரைகளைக்
கண்டால்  என்னை நினைப்பீர்களா
கள்ளிச் செடிகளை  ஏரிமதகுகளை  ஓடைவாய்க்கால்களை
கண்டால்  என்னை நினைப்பீர்களா
தவிட்டுக்குருவிகளை  காடை கௌதாரிகளை
கட்டுவிரியனைக்
கண்டால் என்னை நினைப்பீர்களா
ஒற்றையடிப்பாதைகளை கூரைவீடுகளை
வேலிப்படல்களைக்
கண்டால்  என்னை  நினைப்பீர்களா
ஆமெனில்
மந்தாலையிலையில்  மர வள்ளிக்கிழங்கை வைத்து
உபசரிக்கும்  ஊர்கோடி  இல்லத்தில்
உங்களுக்கு  மணம் முடிக்கவேண்டி
மன்றாடிக்கிடப்பேன்.

0

நான்குகட்டு ஓடுவேய்ந்த
ஏகாம்பரம் இல்லாத வீட்டில்
ஏகாம்பரம்  ஏகாம்பரம்  என்றேன்
ஏகாம்பரம் இல்லாத
வீட்டிலெல்லாம்  மூதேவி
உன் கட்டைக்குரல்தான்  முட்டுகிறது
கேடு ஏகாம்பரத்திற்கா  ஏகாந்தத்திற்கா
என்றது உள்ளிருந்து வந்த குரல்.

0

யோக்கியதை – சில குறிப்புகள்

1.
சதா யோக்கியதையை
கேள்வி கேட்கிறது
யோக்கியத்தனம்
அயோக்கியதைக்கு
இந்தச் சிக்கல் இல்லை
இல்லவே  இல்லை.

2.
நல்லவனாயிருப்பதைக்
காப்பாற்றத் தன் வாழ்நாளைச்
செலவழிக்கிறான்  ஒருவன்.
அதையொரு  பன்னீர்க்கரும்பைப்போல்
கடித்துத் துப்பிச்செல்கினாறன்  மற்றொருவன்.3.
காட்டாற்று வெள்ளத்தில்
ஓரம் நின்று
கை  கால்  முகம்
கழுவிக்கொள்கிறான்
அயோக்கியன்
அவ்வளவு  அயோக்கியத்தனமும்
அடித்துக்கொண்டு  போனது
வெள்ளத்தில்.

4.
வெதுவெதுப்பாக
நீரை விளாவி
கைகளை  நனைக்கிறாய்
உன் யோக்கியதை
இரத்தச் சிவப்பாய்  மாற்றுகிறது
தண்ணீரை.

5.
யோக்கியனாகவே கழித்துவிடும்
வாழ்க்கையை போலொரு
துயருண்டா  இல்லையா.

6.
ஆசாபாசங்களை
மலத்தைப்போல்
அடக்கிக்கொண்டிருக்கிறது
யோக்கியதை
அயோக்கியத்தனத்திற்கு
அந்த மலச்சிக்கல்  இல்லை.

7.
சந்தர்ப்பவாதமும்
அயோக்கித்தனமும்
நல்ல நண்பர்கள்
வேண்டுமானால்
இரண்டு நல்ல 
நண்பர்களை உற்றுக்
கவனியுங்கள்.


உதிரி

1.
எனக்கும் என் நண்பனுக்கும்
பிரியமான  தோழி அவள்
என்னைவிடக் கூடுதல்  அன்பைப் பெறுவதற்காக
என் போதாமையை அற்பத்தனத்தை மோசடிகளை
அவன்  தெரிவித்ததாகச்  சொன்னாள்
பிறகு சொன்னாள்
உன் அற்பத்தனங்கள்
பலகீனமானவையல்ல
சுவாரஸ்யமானவை அதன் ஒழுங்கை
என்னைக் கொடுத்தாவது  நேசிப்பேன்
சம்மதமா என்றாள்.
நேசித்துக்கொள் எனக்குசம்
சம்மதமில்லையென்றேன்.

2.
நீண்டகாலம் நண்பனாக இருந்து
விரோதியானவனை  வெளியூர்
வீதியில்  சந்திக்க  நேர்ந்தது
பதற்றத்தில்
வணக்கம்  வணக்கம்  என்றேன்
அவன் நடந்துகொண்டே
கால்மேல் காலைப்
போட்டுக்கொண்டே  போனான்.

0

அரசியல் பிடிக்காதென்றேன்
அரசியல் பிடிக்காதென்பதே
அரசியல்தானென்றார்.
ஆனாலும் அரசியல்
பிடிக்காதென்றேன்.
மரவட்டையைத் தள்ளவதுபோலத்
தள்ளிவிட்டார்
பண்பட்டவர்தான்
பண்பட்டவரென்றால்
எந்நேரமும்
பண்பட்டேயிருக்கமுடியுமா.

0

சாவைத் தள்ளும் சிறுமி


1.
தாளை வேகமாகத்
தள்ளிக்கொண்டிருந்த
சிறுமியிடம் கொஞ்சம்
மெதுவாகத்
தள்ளக்கூடாதா  என்றேன்.
ஏன்  நாளைத்
தள்ளுவது போல
இருக்கிறதா என்கிறாள்.

2.
நாளைத் தள்ளவது
போலிருந்தால்
உங்களுக்காக ஒருமுறை
நிறுத்தட்டுமா என்கிறாள்.
என்ன
நிறுத்தச்சொல்லட்டுமா.

3.
நாளிற்கும்
தாளிற்குமிடையில்
சிந்தும் மலர்களை
நேரடியாக உங்கள்
சவக்குழியில் மீது
விழுவதுபோன்ற ஏற்பாடு.
அது  என்னுடையது.

சோமன் சாதாரணம்


பாரத காலத்தில் பூதவள்ளியின்
மகனாய்ப் பிறந்த எனக்கு
சாதாரண சோமன் என்ற பெயர்
இயற்பெயர்.
பிழைக்க
கோட்டைக்கொத்தளம்
கொலுமண்டபமென
வாயிற்படிகாக்கும்  பணியே
வாய்த்தது சரி
அரச பணியே இறை பணி.
வாளாதிருந்த வாழ்வுதான்
முதுமைகொண்ட  சாவென
ஒருவரியில் முடிந்தது.
பேரைச்சொன்னால் பீமனே கிடிதாங்கும்
மாமன் நீ அப்போது
பல்லாயிரம்  காலங்கள் போனது.
இப்போதிந்த  நற்பிறப்பு
அம்மா  ஆரவள்ளியாகவும்
மகன் சோமசுந்தரமாகவும் நான்.
பிறப்பும் பாத்திர வடிவமைப்பும் சுமார்தான்.
உனக்குப் பரவாயில்லை
இந்திரன் மாறியும் இந்திராணி
மாறாத கதைபோல
அதே சகுனி  பிறப்பு  சகுனி வாழ்க்கை
பலே.. பலே  பலே.

0

குற்றம்  காண்பதற்காகவே
கண்காணித்தபடியிருக்கிறார்கள்  சிலர்
நானோ  எனது நற்குணத்தின் கழிவுகளை
சிறுசிறு தடயங்களாக விட்டுச்செல்கிறேன்
அவர்களுக்கு  மகிழ்ச்சி,  எனக்கும் மிக்க மகிழ்ச்சி.(திருச்சாழல் - கண்டராதித்தன் - புது எழுத்து - செப்டம்பர் 2015)No comments:

Post a Comment