Thursday, 16 May 2013

அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள் – சங்கர ராம சுப்ரமணியன்

&


என் காலைநடையின்போது
வீதியின் ஓரத்தில்
எறியப்பட்ட ஆணுறைகளைப்
பார்த்தபடிக் கடக்கிறேன்
நேற்றைய பொழுதில்
பூமியை நீத்து
ஊஞ்சலென
சில வீடுகள்
காற்றில் ஆடியதும்
பிறகு
தழுவிய அனிச்சையில் உதறிக் களைவதுமான
நமது காதலை
நுரைத்துச் சுருண்டிருக்கும்
அந்த எளிய ரப்பர் உறை பாடுகிறது-
குறைவுபட்ட பொருள்தானோ
ஆனந்தம்
உயிர்போலவா
துடிக்கும் பேதைமையில்
மலரும் பூவா என்று.


&

தினசரி காலைகளில் நான் போகும் தெருவில் சமீப நாட்களாக ஒரு நொண்டிப் பூனையைப் பார்க்கிறேன். உடல் செழித்திருக்கும் வெள்ளைப்பூனை அது.  ஒரு கால் நிரந்தரமாகப் பழுதாகிவிட்டதால் தெருவை மிக மெதுவாக்க் கடக்கிறது. மற்ற பூனைகளிடம் தென்படும் சூட்சுமம் அற்ற, இந்த உலகின் முன் சரணடைந்த நிலையில் வீட்டின் வாயிற்கதவினடியே உடல் வளைத்து நுழைகிறது. நொண்டிப்பூனையின் ஊனம் அதன் இதயம் வரை ஊடுருவியிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது.  என்னை அந்தக் கணத்தில் அந்த நொண்டிப் பூனை போலவே உணர்கிறேன்.


&


தினசரி
நம் வீட்டு மரத்திற்கு வந்தமரும்
உனக்கும் எனக்கும்
பரிச்சயமான
காகம்
சமீப நாட்களாய் வரும்
ஒரு பெயர் தெரியாத பறவைக்கு
தன் உணவைப் பங்கிட்டு
அதன் அலகு பிளந்து ஊட்டுகிறது.
நம்முடைய காகம்
தன்னிடம வந்த விருந்தினரை
ஒரு காகமென்றே
நினைத்திருக்கக் கூடும்.
அதன் கருத்த இறகுக்கு அடியிலுள்ள
குட்டித்துளையைச் சுற்றி
யார் வரைந்தார்
மினுங்கும் சிகப்புநிற வளையத்தை
உனக்கு இரு பால்பற்கள்
முளைத்திருக்கும் செய்தியை
அந்தப் பெயர் தெரியா பறவையிடம்
சொன்னாயா
என் கிளிப்பெண்ணே.


& ஹம்பி


ஒளியும் இருட்டும் கோளுரசிய
புனைவுடன்
விழாக்களும் வீதிக்காட்சிகளும்
அயல்வணிகர்கள் பரிமாறிக்கொண்ட
உயர்ரகக் குதிரைகளும்
அங்காடிகளில் விற்கப்பட்ட
வைரங்களுமாய்
காலத்தின் காமத்தை எழுதிய
யாத்ரீகன் ஒருவனின்
பயணக்குறிப்பில்
இந்தப் புராதனப் பெருநகர்
யதார்த்தமும் நடனமும்
கல் மேல் கல் முயங்கி மடங்கிய
மகத்துவ ரோஜாவாய்
இடம் பெற்றிருக்கிறது.

இன்று குரங்குகள் உண்டு
ரோஜாக்கள் இல்லை.


& பின்.... மலர் - 1


அங்கே ஒருவருமில்லை
என் பழைய வீட்டின்
கூரை வழியாக
மரணம் பூனை போல் இறங்கியது
என் சாவுச்செய்தி
கேட்டுவந்த
காகம்
என் திறந்த விழிகள்
உலகை வெறிப்பதைத் தாளாமல்
தன் கருத்த இறகுகளால்
என்னை மூடியது
நான் மறுபடி இறந்தேன்.
என் உடலுக்குள் குடித்தனமிருந்த
புராதன இருட்டை
நானும் பார்த்தேன்.

எதுவும் சொல்லப்படவில்லை
(ஆறுதலும் நிராசையும் சேர்ந்து பெருகிறது)

பிரியாவிடை தந்து
எண்ணற்ற காகங்களோடு சேர்ந்து
ஆற்றில் முழுக்க போட்டேன்
அந்தியில் வீடு வந்தேன்.

(அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள் – சங்கர ராம சுப்ரமணியன் – குருத்து பதிப்பகம் – பிச்சாண்டாம் பாளையம், ஈரோடு மாவட்டம்  – டிசம்பர் 2008 – ரூ.45)

No comments:

Post a Comment