Friday, 3 May 2013

ஏரிக்கரையில் வசிப்பவன் - ஸ்ரீநேசன்


என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள்


முதல் நிலவை எப்போதும்
எறும்புகள் மொய்த்தவண்ணம் உள்ளன
இரண்டாவது நிலவு
குழந்தைகளால் மட்டுமே ரசிக்கக்கூடியது
மூன்றாவது நிலவு போலீஸ்காரனின் துப்பாக்கிச் சூட்டுக்குக்
காத்திருக்கும் ஒரு போராளியின் இதயம்
நான்காவது நிலவு எப்போதும் என்னை அழைத்துக்
கொண்டேயிருக்கும் வறண்ட மலையின் குன்று
ஐந்தாவது நிலவு
மதுக்கோப்பையாகத் தளும்பிக் கொண்டிருக்கின்றது
ஆறாவது நிலவுக்குள் சிவை உருவாகிக்கொண்டிருக்கிறாள்
ஏழாவது நிலவு
எனக்குப் பிடிபடாமல் நழுவிக்கொண்டிருக்கும் ஒரு சொல்.

இறுதிப் பகல் தூக்கம்

வெயிலால் சூழப்பட்ட தகிக்கும் வயல்வெளி தனி வீட்டில்
மத்தியான நேரத்து வயோதிகர்களின்
பகல் தூக்கக் கனவுகள் நடமாட
கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றிய
பயமும் அவநம்பிக்கையும் கொண்டதான
பாயில் வீழ்ந்திருக்கிறாய்
மலையொன்றில் ஏறியதிலிருந்து இறங்குவது வரையான
அனுபவத்தின் அலைந்த காட்சி ஒன்று அசைந்து மறைகிறது
சந்திப்புகள் எல்லாவற்றுக்கும் பின்பான
தனிமை கிளர்ந்தெழச் செய்யும்
பிரிவுகளின் உபாதைகள் விஷப்பூச்சிகளென மொய்க்க
அரைத் தூக்கத்தின் விழிப்பிம்சைகளில் புரள்கிறாய்
நேற்று தான் வந்த கடிதம்
அதிகம் பேசிய களைப்பில் உறங்குகிறது
வற்றி வறண்ட மறு எல்லையைக் காணவியலாத அகன்ற
ஒற்றை ஏரியின் அடிப்பாதையில்
தனித்துத் திரியும் ஒருவன் தன்
முன்னுணர்வற்ற பாதுகாப்பின் எல்லையிலிருந்து
விடுபட்டிருக்கவும்
எதையும் மையமிடாத ஒரு பேருந்து சுற்றுப் பயணத்தின்
குறிப்பிட முடியாத புள்ளியில் சிதைந்து கிடக்கவும் கண்டு
நீர்நிலையொன்றைக் கடக்கத் தயாராகும் செம்மறிக்கூட்டத்தின்
முதல் ஆட்டுத் துள்ளலாக எழுந்து அமர்கிறாய்
அதோ உன் குடியிருப்பின் மீது தம் நிழலை மெல்ல
போர்த்திப் பின் இழுத்துச் சென்றுவிடும் மேக நகர்வொன்று
வெம்மை தாங்க்வொண்ணாத தனிப்பறவை அலகு பிளந்து
விழித்திரை மூடித்திறந்து சிறகுகளைக் காலொடு தீற்றி
ஓய்ந்து அமர்ந்திருக்கின்றது மரத்தின் மெல்லிய
கிளையொன்றில்
பேரோசை எழுப்பும் குரலினெருமையொன்று
வீட்டினுள் நுழைந்து
எறவானத்தின் வழி இறங்கிக் காணாமல் கரைகிறது
நடந்தது எதுவோ எதுவும் நடக்கவில்லையோவெனத் திகைத்து
மீண்டும் சாய்கிறாய் கண்மூடுகிறாய்
பலகாலத்துக்கும் விழிக்க முடியாததான  இமைப்பளுவில்
தூக்கத்தின் பாதாளத்தை நோக்கி பிரக்ஞை தவற விழுகிறாய்
அங்குக் குளிர்ச்சியும் நிழலையும்
உனக்குத் தர காத்துக் கிடக்கும்
தற்கொலையுண்டவன் தன்
எல்லா குழப்பங்களையும் இறக்கி வைத்துவிட்ட ஆன்மா.


புகைப்பவர்கள்


என்ன உலகம் இது
என்ன மனிதர்கள் இவர்கள்
நான் பாறையின் மீது
படுத்தவாறு புகைத்துக்கொண்டிருந்தேன்
அவ்வழியில் வந்த ஒருவன்
புகைக்க சிகரெட் ஒன்று கிடைக்குமா என்றான்
இல்லை எனவே இல்லை என்றேன்
அவனோ சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில்
என்னையே எடுத்து வாயில் வைத்து
கொளுத்தி புகைத்தவாறு நடக்கிறான்
நீங்கள் நம்பமாட்டீர்கள்
தீக்குச்சியையும் பெட்டியையும்
நான்தான் தரவேண்டியிருந்தது.பரிசுநான் ஒரு சின்னஞ்சிறு மலரைக் கண்டேன்
அதன் மணமும் மென்மையும் நிறமும் என்னைக் கவர்ந்தன
உடன் மலரைக் காதலிக்கத் தொடங்கினேன்
என்ன பரிசு வேண்டும் கேள் என்றேன்
அது ஒரு மலை என்றது
சமவெளியைக் கடந்து பள்ளத்தாக்குகளைத் தாண்டி
அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு திகைத்தேன்
அதன் உயரமும் உறுதியும் ஆகிருதியும்
என்னை ஆட்கொண்டன
உடன் மலையைக் காதலிக்கத் தொடங்கினேன்
இப்போது மலையிடம் என்ன பரிசு வேண்டும்
கேள் என்றேன்
அது ஒரு மலர் என்றது.


யாருமில்லாத ஏரிக்கரை


இங்கிருந்து ரொம்ப தூரத்திற்கு அப்பால்
ஒரு கிராமம் இருக்கிறது
அந்தக் கிராமத்திற்கு மேற்கே ஓர் ஏரி
ஏரிக்கரையில் வசிப்பவன் இப்போது அங்கில்லை
ஏரிக்கரையின் மீது ஆள் நடமாட்டமில்லாத
ஒரு மதிய தனிமை
வானில் வெட்டப்பட்ட ஆட்டுக்கிடாவின் தலை
யாருமில்லாத ஏரிக்கரையை வெறிக்கிறது
ஏரிக்குள் பரவியிருந்த மாபெரும் கண்ணாடியும்
கொஞ்ச காலத்திற்குமுன் புதைந்து போய்விட்டது
இப்போது
வெட்டப்பட்ட ஆட்டுக்கிடாவின் ரத்தத்தை
புதையுண்ட கண்ணாடி பிரதிபலித்துக்
கொண்டிருக்கிறது.


(ஏரிக்கரையில் வசிப்பவன் – ஸ்ரீநேசன் – ஆழி பப்ளிஷர்ஸ் – டிசம்பர் 2010)

No comments:

Post a Comment