Friday, 10 May 2013

ஓசிப் மெண்டல்ஷ்டாம் கவிதைகள் - பிரம்மராஜன்கவிதை எண்  17


குளம் எங்கே அசுத்தாமாகவும் கலங்கலாகவும் இருக்கிறதோ
அங்கே நான் வளர்ந்தேன் ஒரு சலசலக்கும் நாணலாக
மேலும் ஒரு தளர்ந்த, மென்மையான பேராசையுடன்
சுவாசிக்கின்றேன் எனக்கு மறுக்கப்பட்டிருக்கிற ஒரு வாழ்வினை.

மண்ணினுள் ஒரு குளிர்ந்த வளைக்குள் நான் கீழே அமிழ்ந்து
போவதை
எவரும் பார்ப்பதில்லை
இலையுதிர் காலத்தின் சிறிய இடைவெளியில்
ஒரு சரசரப்பு என்னை வரவேற்கும் பொழுதில்.

நான் எனது குரூர வலியில் கொண்டாடுகிறேன்
மேலும் என் வாழ்வில், அது கனவு போலிருக்கிறது,
ரகசியமாக நான் எல்லா மனிதர் மீதும் பொறாமைப்படுகிறேன்
மேலும் ரகசியமாக அவர்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.


கவிதை எண் 15


விறைப்பாகி இழுக்கப்பட்ட பாய்மரக் கித்தானாக இருக்கிறது
கூர்ந்த காது
கண்கள் வெறிச்சோடியிருக்கின்றன தூரத்தைப் பார்த்து
இரவுப் பறவைகளின் கூட்டிசைக் குழுவொன்று கடந்து பறந்து
செல்கிறது
நிசப்தமாக, நிசப்தத்தின்  ஊடாக.

நான் இயற்கையைப் போலவே ஏழ்மையாக இருக்கிறேன்
வானத்தைப் போல் எளிமையாக.
எனது சுதந்திரம் இரவுப் பறவையின் கத்தலைப் போல
பீதியைத் தருகிறது.

நான் ஒரு உயிரற்ற நிலவை
சவமாகிப் போன வானத்தின் கித்தானைப் பார்க்கிறேன்
உன் உலகம் அந்நியமானதாயும் மரணத்தன்மையுடன்
இருப்பினும்
வெறுமையே, நான் ஏற்கிறேன் அதை.


கவிதை எண்  11


பேச்சுக்கு அங்கே அவசியமில்லை
போதிப்பதற்கு ஒன்றுமில்லை.
எவ்வளவு சோகமானது ஆயினும் அழகானது
இந்த இருண்ட காட்டுமிராண்டித்தனமான ஆன்மா

அது எதையும் போதிப்பதற்கு விரும்புவதில்லை
பேசும் திறமையையும் இழந்ததாய் இருக்கிறது,
ஒரு இளம் டால்ஃபினைப்போல  நீந்துகிறது
உலகின் புகைநிறத்து ஆழங்கள் வெளிச்சமற்றிருக்கும்
இடங்களில்.


கவிதை எண்  303


--என்ன தெரு இது?
--மெண்டல்ஷ்டாம் தெரு.
--என்ன நாசமாய்ப் போன பெயர் அது?
எந்தப் பக்கம் திரும்பினாலும் கூட
இது கோணல்மானலாகவே வருகிறது.

--அவரும் கூட நேரான ஆள் இல்லை துல்லியமான வகையில்.
அவரது அறநெறிகள் லில்லி மலரை ஒத்திருக்கவில்லை.
மேலும் அக்காரணத்தினால்தான் இந்தத் தெருவுக்கு(மாறாக,
நேர்மையாகச் சொல்வதானால், இந்தச் சாக்கடைக்கு)
மெண்டல்ஷ்டாம் என்று பெயர் தரப்பட்டது.

கவிதை எண்  5


நுண்ணுணர் திறனை விடக் கூடுதலான மென்மை
உனது முகம்.
தூய்மையை விடத் தூய்மையானதாக
உனது கரம்.
உன்னால் இயன்ற வரை இந்த உலகிலிருந்து
தொலைவாக வாழ்ந்துகொண்டு
மேலும் உன்  தொடர்பான யாவுமேஷ
எப்படி இருக்கே வேண்டுமோ அப்படி

இதுவெல்லாம் இப்படி இருக்க வேண்டும்.
உனது துயரம்
மேலும் உனது ஸ்பரிசம்
என்றுமே குளிர்ந்து விடாது,
மேலும் அந்த அரவமற்ற பிடிப்பு
நீ சொல்லும் விஷயங்களில்
புகார் இன்றி சொல்வது,
மேலும் உனது கண்கள்
தொலை தூரத்தில் பார்த்துக்கொண்டு.(ஓசிப் மெண்டல்ஷ்டாம் கவிதைகள் – மொழியாக்கம்-பிரம்மராஜன் – விருட்சம் – ராகவன் காலனி – மேற்கு மாம்பலம் – சென்னை 33 – ஏப்ரல் 2001 – ரூ.10)

No comments:

Post a Comment