Friday, 3 May 2013

காலத்தின் முன் ஒரு செடி - ஸ்ரீநேசன்


அந்தி


ஒரு தனியான மாலை
நிறைந்த கருவேல னேரியில்
கூச்சலில்லை அசைவுமில்லை
துயரமுற்று மரங்கள் சில
பரிதாபமாக வீழ்ந்துள்ளன
பசியான பிணமான மனிதர்களைப்போல்
வெட்டுப் பட்ட காயங்களிலிருந்து
சில மரங்களின்
மௌனம் பெருகிக்கொண்டிருக்கிறது
சில இறக்கைகள் உதிர்ந்த
மலர்களினூடே வண்ணத்துப்பூச்சி
அப்பாலான
ஏரிப்புறத் தரிசிலிருந்து ஒளிர்கிறது வெளிச்சம்
காதடையும் கால்நடைகள்
புல்
பிய்க்கும் ஓசை
மனதின் நிச்சலனத்தில் பாய்கிறது
பறவைகள் சில உரையாடுகின்றன அவற்றுடன்
இறுதியுடன் அந்நாளின் பிறவற்றுடன்
பசும் வெளியில்
கருப்பு மஞ்சள் பழுப்பில்
பறந்தவாறு அலையும் கண்கள்
எங்கோ எதற்கோ பெருகிய
ஒரு சிரிப்போசையின் பெண்
காதலை எதிர்ப்பார்ப்பை
நிரப்புகிறாள் ஏரிமுழுவதும் நிரம்புகிறாள்
அதில் மூழ்கி மூழ்கிக் கொண்டிருப்பவனை
மேலும் ஆழ்த்துகிறது ஆழத்தில்
திரண்டு வரும் இருள்.


வறண்ட சூரியன்


வறண்ட ஏரி படுத்திருக்கும் பின்புலத்தில் நின்றிருக்கும்
வறண்ட மலை அதன் எதிரே சிறகை விரித்த
வறண்ட வயல் வெளியதன் வானத்தில்
வறண்ட சூரியன் சோர்வுற்று நடந்து விதைக்கும்
வறண்ட வெயில் அது விளைவிக்கும்
வறண்ட பகலில் நடந்து செல்லும்
வறண்ட ஒருவன் தன்
வறண்ட மனோநிலையை எழுதிய
வறண்ட கவிதை இது.


மாய மரம்


அந்தரத்திலும் பூமியிலுமாக நிற்கிறது
ஒரு மரம்
ஒரே நேரத்தில்
அசைந்தும் அசையாமலும்
அதன் கிழக்கு முகமோ வெளிச்
சத்தால் பகல் அடைந்திருக்க
மேற்கின் கிளைகளிலோ
இருள் அடர்ந்திருக்கிறது
அதன் கூடுகளிலிருந்து பரவும்
குரல்களின் பிஞ்சுப் பட்சிகள்
பிரிவின் அவலத்தையும்
மகிழ்வின் உறவையும் எழுப்புகிறது
ஒரு பகுதி சருகாலும்
மறு பகுதி கனிகளாலும் நிரம்பியிருக்கும்
அதன் அடியிலிருந்து
குழந்தைகள் சில
ஏமாந்தும்
சில குதூகலத்துடனும் திரும்புகின்றன
காலத்தின் முன்
னொரு செடியாகவும்
பெரும் விருட்சமாகவும்
தோற்ற மளிக்கும்
இந்த மரம்
தன்னைக் கடந்தோர்
சிலருக்கு உள்ளேயும்
சிலருக்கு வெளியேயும்
தெரிகிறது.


நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார்


வெளியூரிலிருந்து
ஏதோ காரணம்
வந்த பேருந்து வழியில் பழுதடைந்திருக்கலாம்
அல்லது தன் மகனை அவ்வளவு
லேசில் பிரிய மனமில்லாமல்
தூங்கிய பின் கிளம்பியிருக்கலாம்
அல்லது கணவனுடன் சண்டையிட்டு
வைராக்கியத்தில் நேரம் பாராமல்
புறப்பட்டிருக்கலாம்
ஆட்கள் அடங்கிய நடமாட்டமில்லாத
நிலைய நள்ளிரவில்
பேருந்தை விட்டு இறங்குகிறாள்
நகரத்திலிருந்து
கிராமத்திற்குச் செல்பவளாக
அவன் பாதையில்
பயந்தும் துணிந்தும் நடந்தவள் தன்னைத்
திரும்பிப் பார்த்தவாறு
கடக்கும் சைக்கிள்காரனிடம் தன்னை
அமர்த்திச் செல்லுமாறு மன்றாடுகிறாள்
ஏற்றிக் கொண்டவுடன்
பெருமூச்சு விட்டு
இயேசு வந்தீர்கள் என்கிறாள்
நீங்கள்
கூட
பார்த்திருக்கலாம்
நள்ளிரவில்
கிராமத்துச் சாலையில்
தன் சைக்கிள் பின்புறத்தில்
இயேசு
ஓர் இளம் பெண்ணை
அமர்த்திச் செல்வதை.


திருவண்ணாமழை


ஒவ்வொரு முறையும்
திருவண்ணா
மலையிலிருந்து திரும்பிய போதும்
மழை பெய்தது
இன்றும்
திருவண்ணா
மலையிலிருந்து திரும்புகிற போது
மழை பெய்து கொண்டிருக்கிறது
இனி ஒவ்வொரு முறையும்
மலையிலிருந்து திரும்பும் போதும்
திருவண்ணா மழை பெய்யும்.

(காலத்தின் முன் ஒரு செடி – ஸ்ரீநேசன் – புது எழுத்து – மே.2002)

No comments:

Post a Comment