Sunday, 1 May 2016

சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை – சங்கர ராம சுப்ரமணியன்


பரிசு


இருட்டின் மங்கலில் பூக்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்
அவள் வீட்டில் எந்த இடத்தில் அமர்ந்திருப்பாள்
கைகளில் படரும் மலரின் ஈரம்
ஒரு காலாதீதப் பரிசு
முகத்தை தன்னிச்சையாய்த் தேய்த்தபடி
சாலையைக் கடப்பவர்கள்
இருளை அதிகரிக்கும் விளக்குகள்
விபரீதத் தோற்றங்களாய் தெரிகிறது
இவர்கள்
உடலும்
நிழலும்
எங்கிருந்து தொடங்குகின்றன
எங்கு முடிகின்றன
நீங்கள் குனிந்து
அந்தப் பூக்களைப் பார்க்கிறீர்கள்
அவை உங்கள் கைகளில் கனக்கின்றன
ஒரு கண்ணாடி போல
ஞாபகங்களெங்கும்
ஒரு கண்ணீர்த் துளி படர்ந்திருக்கிறது.இலைகள்


என்
புழக்கடைப் பாத்தியில்
முளைவிட்டிருக்கும்
பசிய இலைகளாய்
ஒளிர்கிறது
காமம்.
0

வாழை மரங்களினூடாய்
நடக்கும்போது
சின்னஞ்சிறிய
சிறுவன்
நான்

0

காற்றில் எல்லையற்று
தழைந்து
மடங்கி
விரியும்
இலைகளின் வெளியில்
பச்சை
பச்சையென
உருண்டு பரவும்
நீர்த்திவலை
நான்.

0

இறைஞ்சுதலின் கரமென
குவிந்திருக்கும்
இலையின்
மையத்தில்
மொட்டென
விழுந்தது
கண்ணீர்த் துளி.

தன் தலைக்குள் யாரோ
கத்தியை செருகிவிட்டதாக
அமரர் கே
ஒரு கனவு கண்டார்.
தலைக்குள் கத்தி நுழையும்போது
ஒரு புள்ளியில்
ரத்தம் ஒரு செடியைப் போல பச்சையாய்
உயர்ந்து பெருகியதாக
அவர் நினைவிலிருந்த வர்ணித்தார்.
முதலில் தன் போர்வையை மடித்து வைத்தார்.
ரத்தம்  மனைவியைத்
தீண்டி
ஜன்னல் வழியே வெளியேறி
பகலில் அலுவலகம் வரை
உறையாமல் பெருக விரும்பினார்
மறுநாள் காலை
அமரர் கே எல்லாரிடமும் வழக்கத்திற்கு
மாறாக உற்சாகத்துடன் நடந்து கொண்டார்.


நம் குழந்தைகள்
நீல நிற நுரை சூழ்ந்த
அவரை வடிவக் கிண்ணங்களில்
ஆழ்துயில் கொள்ளட்டும்
நவீன கால மருந்துகள்
அவர்கள் துயிலையும் கனவையும்
கவனித்துக்கொள்ளும்
நாம் நிறமின்றி தொலைந்து போவோம்.
அடர்சிகப்பு
செம்பருத்தியைக் காணும் பொழுதெல்லாம்
உன் முலைகள்
நினைவில்
பிரசன்னம் கொள்வதைத்
தவிர்க்கவே இயலவில்லை.
ஒயிலாய் நீண்டிருக்கும்
திரண்ட
மகரந்தக் கூம்பை
கிளிகள் கொத்துவது
அ – காலத்திலா.

0

முலை ஒரு கனி அல்ல. கனியின் சாறும், தசையும் பசியை ஆற்றக் கூடியது. கனிகளை அணில்கள், குருவிகள், என் கவிதையில் வரும் செம்போத்துப் பறவைகள் மற்றும் வீட்டு விலங்குகள் சிலவும் உட்கொள்ளும்.  கனியைக் கொஞ்சம், கொஞ்சமாய் மெதுவாகக் கொறித்தாலும்  கனி சிறுத்து கடைசியில் சூன்யமே மிஞ்சும். நான் கவிஞனென்பதால் முலைகளை மலரென்று அழைப்பேன்.  உபயோக மதிப்பைத் தாண்டி நீங்கா அழகின் இறவாமைக்குள் அதன் அலகு நீள்வதால் முலைகளை நான் மலரென்றே அழைப்பேன்.


(சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை – சங்கர ராம சுப்ரமணியன் – சந்தியா பதிப்பகம் – சென்னை – நவம்பர் 2005 – ரூ.35)

No comments:

Post a Comment