Thursday, 16 May 2013

காகங்கள் கொண்டு வந்த வெயில் – சங்கர ராமசுப்ரமணியன்

0

வாணி வராத வெயில் உடல்களைப் பிளந்துவிடுகிறது
உடல் பிளந்த துயரம் எனக்கும்
கண்ணீரை வரவழைக்கிறது
வாணியுடன் நடந்துசென்ற வெயிலைப் பற்றி
தெரியுமென்பதால் சொல்கிறேன்.
ஒரு கப்பலின் நிழலைப்போல் நகர்ந்து
வெயில் தன் சாய்கோணத்தை
அப்போது மாற்றத் தொடங்கிவிடும்
(அதன் நுட்பமான மாறுதல்களின் வழியே நாம் கிழமைகளை
வேறுபடுத்தி விட முடியும்)
அசௌகரியமற்ற முகத்துடன் சமனப்படுத்தி
வாணி ரகசியமாய் வெயிலுக்குள் நுழைந்துவிடுவாள்
அப்போது தெருக்களெல்லாம் அந்தர் இறுக்கத்திலிருந்து
விடுபட்டு
உரையாடத் தொடங்கும்
ஏற்கெனவே நிபந்தனைகள் உள்ளதால்
நான் நடனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வேன்
கடலில் இன்று மீன்பாடு அதிகம்
என்பாள் புன்னகையுடன் மீன்காரி
மீன்கள் இன்று வேண்டாம் என கிறிஸ்துவைப் போல்
அமர்த்தலாய்ச் சொல்வேன்
கடலின் மேல் பொழியும் வெயில்
வெள்ளியெனத் துள்ள
வாணியின் தலையிலிருந்த கொக்குகள்
பறக்கத் தொடங்கும்.
இன்று சூடு அதிகம்
குறைவு
என்று ஏதாவது சொல்வாள்
அவை எதுவும் வெயிலைப் பற்றியதல்ல.


0


நகரத்துக்கு வெளியே
ஒரு சாயங்காலம்
மூட்டத்துடன் கவிழத் தொடங்குகிறது.
பிரிவின் விசனத்துடன்
சாலை இறக்கத்தில்
மறையத் தொடங்குகிறது சூரியன்.
நல்ல வார்த்தைகள் சொல்லி
வழியனுப்ப இறக்கத்தில்
சைக்கிளில் தடதடவென்று
விரைகிறார்கள் சிறுவர்கள்....
இன்று
எனக்கு ஒரு பழந்தன்மை பொருந்திய
கருக்கல் அந்தியை
திரும்பப் பரிசளித்தன பறவைகள்.
என் சிறுநகர வீட்டில்
இந்த பழந்தன்மை வாய்ந்த சாயங்காலம்
எதைச் சொல்லப் போகிறது
அம்மாவுக்கு.....
தலைகோதும் ஒரு சிறுகணம் போல்
இந்த அந்தியும்
கடக்குமா
அவளை....

0

ஒரு வேலைக்குப் பொருத்தமற்றவர் என
உங்கள் மேல் புகார்கள் அதிகரிக்க
அதிகரிக்க
உங்கள் அன்றாட நிலைமைகளைக் கருத்தில்கொண்டு
உங்களுக்கு ஒரு எளியப் பணி வழங்கப்படுகிறது 
ஊரின் புறவழிச்சாலையில் உள்ள
மிருகக் காட்சி சாலையின் சிங்கத்துக்கு
பல் துலக்கும் வேலை அது
காவல் காப்பவனும் நீங்களும்
கூண்டில் அலையும் பட்சிகளும் மிருகங்களும்
உங்கள் மன உலகில்
ஒரு கவித்வத்தை எழுப்புகிறது 
அதிகாலையில் பிரத்யேக பேஸ்டை பிரஷில் பிதுக்கி
உங்களது பணி இடத்திற்கு ஆர்வத்தோடு கிளப்புகிறீர்கள். 
அதிகாலை
மான்கள் உலவும் புல்வெளி
உங்கள் கவித்வத்தை மீண்டும் சீண்டுகிறது 
முதலில் கடமை
பின்பே மற்றதெல்லாம் எனச் சொல்லிக்கொள்கிறீர்கள்
கூண்டை மெதுவாய் திறந்து மூலையில்
விட்டேத்தியாய் படுத்திருக்கும் சிங்கத்திடம்
உங்களுக்குப் பணி செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளேன்
நீங்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று
விவரத்தைக் கூறி பிரஷை காட்டுகிறீர்கள் 
ஒரு கொட்டாவியை அலட்சியமாக விட்டு
வாயை இறுக்க மூடிக் கொள்கிறது சிங்கம்
ஸ்பரிசம் தேவைப்படலாம் என ஊகித்து
தாடையின் மேல்புறம் கையைக் கொண்டு போகிறீர்கள்
சிங்கம் உருமத் தொடங்கியது
கையில் உள்ள பிரஷ் நடுங்க
உங்களுக்குப் பிரஷ் செய்வது என் அன்றாட வேலை
அது எனக்குச் சம்பளம் தரக்கூடியது
எவ்வளவு நாற்றம் பாருங்கள்
உங்களின் பற்களின் துர்நாற்றம் அது
சிறிதுநேரம் ஒத்துழையுங்கள்
மீண்டும் சிங்கம் உறுமுகின்றது. 
அது பசியின் உறுமலாக இருக்கலாம்.
நீங்கள் மூலையில் சென்று அமருகிறீர்கள்
காலையின் நம்பிக்கையெல்லாம் வற்றிப்போக
பக்கத்துக் கூண்டு பறவைகளிடம்
வழக்கம்போல்
பணி குறித்த முதல் புகாரைச் சொல்லத
தொடங்குகிறீர்கள். 
எனது வேலையை ஏன் புரிந்துகொள்ள
மறுக்கின்றது சிங்கம்.
பறவைகள் ஈ ஈ எனப்
புரிந்தும் புரியாமலும் இளித்தன.
கூண்டைச் சுற்றி மரங்கள்
படரத் தொடங்கும் வெயில்
வாயில் காப்போன் உங்களைப் பார்வையிட
தூரத்தில் வந்து கொண்டிருக்கிறான்.

0


பால்யம்


நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, நாங்கள் அடிக்கடி நடந்து கடக்க வேண்டிய சில முடுக்குகள் பற்றி பயமிருந்தது. இரவில் அதன் குறுகலும், நீளமும் கடப்பதற்கே பயமுறுத்தும்.  அந்த முடுக்குகள் தனக்கென ஒரு சீதோஷ்ண நிலையை வைத்திருந்தன. அன்று செடிகளும், புதர்களும் எங்களை விடப் பெரிதாக இருந்தது. கக்கூஸ்களின் சுண்ணாம் புதிரும் துளைகளிலிருந்து பாம்புகள், நாங்கள் வருவதற்காக காத்திருந்தன.  தங்கள் நாவால் எங்கள் மலத்துவாரத்தைத் தொட்டு தொட்டுப் பார்த்தன.  எங்களுக்கு எந்த சந்துகள் குறித்தும் இப்போது பயங்கள் இல்லை. நாங்கள் பக்குவப்படுத்தப்பட்ட பெரியவர்களாகிவிட்டோம். எந்த புது சந்தொன்றைப் பார்க்கும்போதும் அது ஒரு சந்திப்பு மட்டுமே.  இந்தக் குறுகிய பாதையைக் கடந்துவிட்டால் எங்கள் ரகசிய ஆசைகள் நிறைவேறும்  என்பது மட்டுமே எங்கள் உள்ளத்தில் உள்ளது.  பழைய கழிப்பறைகளில் பாம்புகள் இருந்தது. நவீன கழிப்பறைகளில் பயமே இல்லை.  வெறும் தட்டையான மிடுக்கு மட்டுமே.

0

தங்களுக்கும் ஒரு இறந்த காலமும்
ஏக்கமும் உருவாகுமென்று
ஸ்கூட்டர்கள் நினைத்துப் பார்க்கவேயில்லை
அவைகளுக்கும்
ஒரு காவிய முடிவும்
வழியனுப்பதலும் முடிந்துவிட்டன.
மஞ்சள் விளக்குகள்
கடற்காற்று
அவைகளின் நினைவில்
பட்டறைகளிலும்
எங்கோ இருட்டறைகளிலும்
கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றன
இந்த நெடிய பூமியில் எல்லாரும்
தொலைந்துபோகும் அபாயத்தை எண்ணி.

(காகங்கள் கொண்டு வந்த வெயில் – சங்கர ராமசுப்ரமணியன் – புதுமைப்பித்தன் பதிப்பகம்  - சென்னை – முதல் பதிப்பு 2003 – ரூ.25)

No comments:

Post a Comment