Friday, 8 March 2013

ஜென் மயில் - பிரம்மராஜன்ஜென் மயில்


புன்னை மயில் விரைந்தது
ஜென் காரின் குறுக்காய்ப் பறந்து
குருதியொத்த நிறம்
சேதாரம் எதுமில்லை
கேட்டுத் திரும்பின கால்கள்
மைனாக்களின் உலோக ஸிம்பனியை
மடையான்களின் மாலை சாதகத்தை
ஸெல் கோபுரம் முற்றும் உச்சியில்
இருவரின் ஸ்பானர்கள் இயங்கும்
வெள்ளி வெளிச்சத்தில்
கைகள் ஒயக்காத்திருந்து
கடவுள் கயிறுகளை சற்றே
மேலே இழுத்து விடுகிறார்
கால்கள் கண்டன
விளக்கற்ற அடுக்களையில்
உறுகாய்ப் பாட்டிலின் மீதிருந்து
கொசுக்களைப் பிடித்துண்ணும்
மரத்தவளை


புத்திப் புலன்

புள்ளிக் குயிலொன்று நுணா மரத்தில்
கண்கண்ட காட்சி புத்தி பாராது
அருகாமைக் கூந்தப்பனையிலமர்ந்து கூவியது
திக்கித் திக்கி
புத்திக்குப் புலர் நேரம்
அகன்றுயர் ஆண்பனையில் அமர்ந்தது
நடுநெஞ்சிலிருந்து
விருட்டென்று பறந்தகன்றது வல்லூறு
இலக்கை இழக்க
விரும்பாது

செங்கோணச் சமதளம்

சாபமும் மறதியும் சகதியாய்க் குழைந்து
நதியாகத் தவறி கிழக்கு மேற்கில்
குப்புறத் தூங்கும் சாக்கடை
துருவங்களில் வரைவளைவுகாய்
நீந்தும் நீர்ப்பாம்புகள்
தகவமைப்பின் உச்ச இலக்கணம்
பொரியளவேயாகும் மீன் குஞ்சுகள்
வரைவளைவுகளை வெட்டிச் செல்லும்
செங்கோணங்களும் பிறவும்
நீர்மறந்த ஏரிகள் நிராகரித்த
சிலந்தி இழைவழி இறங்குவது போல்
எரிபொருள் வற்றிய ஹெலிகாப்டராய்
சாம்பல் நிறக் கொக்கு
துணுக்கு மீன்கள்
நீந்தி ஒயும்
ஒளியும்
தென்வடலாய் இந்த வாயில்
கைப்பிடிச்சுவரில்
மந்திரக்கோலாகக் காய்ந்த குச்சி
தார்வேலையில் மிஞ்சிய ஒரு பாறையெச்சம்
இரண்டிலொன்றைத்
தேர்ந்து
குறிபார்க்க
யாருக்கென்ன
யோக்யதை

பெற்றே தீர்தல் மீண்டு

பிரயாணம் முடிந்து ஊர்வந்து
தேர்நின்ற பின் பயணவழிவரைபடம்
பார்த்து சென்றவழியெல்லாம்
எறும்பாய்த் தேய்ந்து செல்கிறபோது
பனையும் தென்னையும் மயங்கும் புலம்
மணலில் மறைந்து கிடக்கிறது
காரை நிறுத்தும் சோதனைச் சாவடிகள்
ஆவணங்களை மேயும் ஆயுதபாணிகள்
சரிசரியெல்லாம் போகலாம் போவென்றாலும்
மேலதிகாரியின் ஜோபிக்காக இன்னும்
கார் தயங்கித் தடங்க
காகிதக் காசுகள் கைமாற
இழப்பொன்றுமில்லை
ஒர் சூர்யாஸ்தமனம்
உருண்டைப் பாறையில் மாறிமாறிக் குந்திய
கடல் காகங்கள்
எறும்பு மீண்டும் பாதை தொற்றிச்
செல்கிறது
மேலதிகாரியையும் சீருடையாளரையும்
வரைபடத்தில்
போடுவதில்லை
என்பதை அறியாது


நவீனக் குறுஞ்செய்தி

மணியன் என்பவன் சொன்னதென்ன என்று கேட்டேன்
அந்த தபால் கார்டு புரியாமல்
அடுத்த நாள் ஆயிரம்
வரைந்தீர் அத்தனையிலும் அதே
கொக்கிகளைக் கோர்த்துச் சாய்த்தது போல
சொன்னதென்ன என்றேன் அடுத்து
விடுத்தீர் அயிரத்தெண்ணூறு இன்லாண்டுகள் மாற்றமிலாது
பிறகு தினத்திற்கு 22 தந்திவீதம் பெற்றவள் வாங்கி வைத்தாள்
அதே மூன்று வரிகள் ஒன்றிலும் சாவியில்லை
அவன் சொன்னதென்ன என்றேன் எட்டவில்லை உமக்கு
உம்மிடம் யூடியூப் செல்ஃபோன் சாதாஃபோன் கேமராஃபோன்
ஏதுமில்லை அவன் என்ன சொன்னான் நாம் நம்மைப் பற்றியா
படித்தும் படிக்காமல் விட்ட புத்தகங்கள் பற்றியா
வாங்க நினைத்து வாங்காது விட்டவை பற்றியா
வாங்கியும் பிரிக்காது விட்ட நூல்களையா
படித்துவிட்டது போல பாசாங்கு செய்தவை
பவர் ரீடிங்என்று சொல்லி நீர் 10 பக்கங்களைத் தள்ளிவிட்டு
வாசித்ததையா
முப்பது முறை தொடங்கி ஒருபோதும் முடிக்காது விட்டவை
பிறகும் கடிதங்கள் எப்போதும் போல்
இருவர் பிடித்திழுத்து ஸ்பிரிங்குகளை
தளர்த்தியது போலிருந்த எழுத்துக்கள்
உமது டைப்ரைட்டருக்கு வலிக்காதென்று
எண்ணித் தட்டுகிறீர்
நீர் மறைந்தும் உம் டைப்ரைட்டரிலிருந்து
எப்படி எண் இ-மெயில் பெட்டிக்கு
அந்த மூன்று வரிகள் வருகின்றதென்று தெரியவில்லை
ஸ்பாம்பாதுகாப்புக்கு மிஞ்சியும்


அன்னம் உன் ஓவியம்

தந்தையைத் தீட்டுவது கடினமில்லை
பக்கவாட்டில் எழை வீடொன்றைப்
பார்த்துக் கொண்டிருந்தார் கண்மூடி
தங்கையின் பின்புறம் கூட உறுத்தவில்லை
திறந்த கண்ணாடி ஜன்னல்
பாய்மரமேறிய ஒற்றைத் தோணியைக் கண்டாள்
வெண்ணிற உடுப்பில்
அடுத்த அடி எடுப்பது போலிருந்தன கால்கள்
ஃபிராய்டை கரியநிறக்
கம்பிக் கூட்டுக்குள் போட்டாயிற்று
அம்மாவை வரையும் உக்கிரமில்லை
காதலியின் கணவனைச் சித்திரிக்க சலிக்கவில்லை
கார்க்கியின் சொட்டைத் தலைமேல் ஆறால்மீன்
சிறுமி எப்போதும் மாதாகோயிலின் மணியாய்
குழந்தைப்பெண் குழந்தைக் காதலிக்கு நகப் பூச்சு
ஒரு ரோல்ராய்ஸ் கார்
தலையில் குத்தீட்டி எறிய குதிரை
மோனாலிஸாவும் நெப்போலியனும் அருகருகே
பிக்காஸோவின் மூளை பிடறி வழியாக நாக்கை ஆராதிக்க
ஒரு வாசிக்கப்படாத மேண்டலின்
உன்னை வரையும்போதுதான்
மூளை சுக்கல்சுக்கலாக
முற்றாத சலவைக் கல்லை கைதவறிக் கீழேவிட்டீர்போல்
தரையில் கால்பாவாது உன்னை எற்றி வைக்க
வேண்டியிருக்கிறது
பாய்ந்து கிழித்தெறியத் தயாராகி
முடியாத வேங்கைகள் அவற்றைக் குறிபார்க்கும் துப்பாக்கிகள்
எல்லாம் சமைந்து நிற்க
ஈயாடாது
எறும்பசையாது
சிகரெட் புகை சுழலாது
அசைவற்ற மோட்டார் பைக் சுற்றி நாலைந்து பேர்
தேனீ ரீங்கரிக்காது
சமுத்திரங்கள் எல்லாம் வெட்டப்பட்ட காலத்தில் போல
மௌனிகளாய் ஸகரன் ஸகரன் எண்று நாமாவளியை மனதில் ஜபிக்க
உன்னருகே முட்டையிலிருந்து
மூன்று குஞ்சுகள்
அன்னமே

(ஜென்மயில்  - பிரம்மராஜன்  - உயிர்மை பதிப்பகம் - டிச.2007  - ரூ.50)

No comments:

Post a Comment