Sunday, 3 March 2013

மண் கவுச்சி - இரத்தின புகழேந்தி

என்னத்த வெதைக்க

நெல்லறுத்த கொல்லையில
எள்ளு வெதைக்கலாம்னா
எள்ளு வெதைச்ச கொல்லையில
கொள்ளுகூட மொளைக்காதாம்
கரும்பு போடலாந்தான்
ஒரம் வெலைய நெனைச்சாலே
சக்கரையும் கசக்குதே!
கரம்பாப் போட்டாலும்
கண்றாவி வரிய
கட்டித் தொலைக்கணுமேன்னு
உளுந்து பயிரு வெதச்சுபுட்டேன்
பயிர வெதச்சு
மயிர புடுங்கறதான்னு
பங்கத்த வாங்குறான்
பங்காளி

மீன்கள்

அந்த காலத்துலயுந்தான்
வெள்ளம் வரும்
கொல்லையில வெறகால்
தண்ணிய வடிகட்டுனா
தட்டகாலுல மீனுவோ அடஞ்சிருக்கும்
அரவம்படாத போயி
நோவாத அமுக்குனா
வெறா
கொறவ
கெளுத்தி
மடவ
கெண்ண்டன்னு...
சாக்குல கட்டிகிட்டு வருவோம்.
அடடா...
அர்ச்சுனர் சொல்ல
எச்சி ஊர ஊரக் கேப்போம்
எல்லாம் எங்க தாத்தா போச்சி?
ஒரம்
ஊரியா
பூச்சி மருந்துன்னு
வக்காளோழி
கொல்லைய நாசம் பண்ரான
எப்புடி தங்கும்?

ஆண்களுக்கு சமமாய்

களை வெட்ட
மண் அணைக்க
அறுப்பு அறுக்க
கட்டு தூக்க
வைக்கோல் திரைக்க
கருப்பம் புள் தூக்க
அண்டை வெட்ட
கான் பரிக்க
விறகு உடைக்க
நெல் தூற்ற
வாய்க்கால் செத்த
கட்டடவேலை செய்ய
எல்லாவற்றையும் 
ஆண்களுக்கு சமமாய்
செய்ய வரும்
அவர்களைப்
பெண் எனப் பிரித்துக்காட்டுவது
அந்தக்
கூலி
மட்டும்தான்.

கால் காணி கரும்பு

விளைந்தது 20 டன்                               ரூ
விலை டன் ஒன்றுக்கு ரூ.500 வீதம்                          10000
செலவுகள்
ஏர் உழுதது                                                                                      420
கான் அடித்தது                                                                               100
விதை புள் வாங்கியது                                                             750
புள் ஊன்றிய கூலி                                                                        50
களை வெட்டு கூலி                                                                   500
மண் அணைத்த கூலி                                                              100
ஊரியா உரம்                                                                                 2000
வெட்டுக் கூலி                                                                              1200
வண்டி சத்தம்                                                                                320
ஆள் கூலி                                                                                        150
மாமூல்                                                                                              100
டிரக் வாடகை                                                                                800
சரிந்த கரும்பு ஏற்றிய கூலி                                               100
தண்ணீர் வாரம்                                                                          1882
மொத்தம்                                                                                         8472
வரவு                                                                                                 10000
செலவு                                                                                              8472
மீதி                                                                                                      1528
என் பங்கு                                                                                        764
அண்ணன் பங்கு                                                                          764
வளர்க சர்க்கரை ஆலைகள்.

(வெளியீடு - களம், மருங்கூர் & அஞ்சல், திருமுட்டம் வழி,  விருத்தாசலம் வட்டம், அ.கு.எண். 608703 -முதல் பதிப்பு - செப்டம்பர் 1994.)நூலின் தலைப்பே உள்ளடக்கத்திற்கான வெளிப்பாடாக அமைந்துள்ளது.
----------------------------------------------
தமிழவேள்

மண் வாசனை என்பது புழக்கத்திலுள்ள தலைப்பு. மண் கவுச்சி என்பது இலக்கியத்தின் புதிய போக்கிற்கான திசைக்காட்டி.இந்த மண்வாசனைக் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் நில உடமை ஆதிக்கம் கொண்டவை. இவர்களுக்கும் கீழே இருக்கும் உழைக்கும் வர்க்கங்களைப் படைக்கும்போது அவர்களிடம் இருப்பது வாசனையல்ல கவுச்சி; அதனைச்சொல்ல மண்வாசனையல்ல 'மண் கவுச்சி'தான் பொருத்தமானது என்ற சிந்தனையின் விளைவே இரத்தின புகழேந்தியின் மண் கவுச்சி.
என் லாண்டரி கணக்குகூட இலக்கியம்தான் என சுஜாதா ஒரு முறை சொன்னார். கால்காணி நிலத்தில் நட்ட கரும்புக்கான வரவு செலவுகளையும் கவிதையாக்கியுள்ளார் இரத்தின புகழேந்தி. ஆரம்ப நாட்களில் தன்னோடு தொடர்புடைய எல்லாமே  இலக்கியமாக ஒவ்வொரு படைப்பாளிக்கும் தோன்றுவது இயல்புதான். மற்றவர் பார்வைக்கும் அவைகள் அப்படித் தோன்றுமா எனத் தேர்ந்து  தெளிவதிலேதான் படைப்பாளியின் வளர்ச்சி இருக்கிறது.


2 comments:

  1. நன்றி நண்பரே நீண்ட இடைவெளிக்குப்பிறகு என் மண்கவுச்சி பற்றி இணையத்தில் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிற்து. தற்கால இளைஞர்கள் 90 களின் கவிதைப்போக்கினை அறிந்துகொள்ள உதவும். இந்த பணி தொடரட்டும்.

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது உங்கள் கவிதை .அதிலும் குறிப்பாக அந்தக்கூலி மட்டும்தான் மிகச்சிறப்பாக இருக்கிறது.
    வாழ்த்துகள் வாலிதாசன்.

    ReplyDelete