Monday, 4 March 2013

அறம் என்னும் ரத்தச்சிவப்புக்கனி - சம்பு

பேரழகி உண்ணும் ஆப்பிள்...
 கோமாளியின் காதலியான பேரழகி
ஆப்பிள் என்பது
சுவைத்து சுவைத்து உண்ணும்
ஒரு கனியென அறியாமலிருந்தாள்
கோமாளியோ அறிந்திருந்தான்
இப்பிரதேசம் சாராத அரிய கனி
ஆப்பிளென்றும்
காதலியான பேரழகிக்கு அதைப்
பரிசளிக்க வேண்டுமென்றும்

அவளிடம் அதைச் சொல்ல நினைத்து
அவன் மறந்த இரவில்
ரத்த நிறத்தில் பளபளக்கும்
ஆப்பிளொன்றை கனவில் கண்டாள்
கோமாளியின் காதலியான பேரழகி

அவனிடம் அதைச் சொல்ல நினைத்து
அவள் மறந்த இரவில்
கோமாளி கனவில் கண்டான்
பளபளத்து தகிக்கும் ஆப்பிளொன்றை
கனவு காணும்
தன் காதலியான பேரழகியை

அவளிடம் அதைக் கேட்க நினைத்து
அவன் மறந்த இரவில்
கனவில் கண்டாள்
கோமாளியின் காதலியான பேரழகி

தகிக்கும் ஆப்பிளொன்றை அவன் பரிசளிப்பதையும்
சுவைத்து சுவைத்து தாம் அதை உண்பதையும்.


 மரியாவும் ஜோசஃப்புமாக இருந்தவர்கள்...
 இருபது வயதேயான ஜோசஃப்
அலைந்தபடியிருந்தான்
இருபது வருடங்களுக்கும் மேலாக அந்நாவலுக்குள்
மூன்று கொலைகளையும்
ஐந்து வன்புணர்ச்சிகளையும் தடயமெதுவுமின்றி
முடித்திருந்த ஜோசஃப்
போலீஸின்
கண்களுக்கெப்போதும் அகப்படாமலேயிருந்தான்
அவனைக் காட்டிக் கொடுக்க எவருமே துணியாததால்
நாவலாசிரியனுக்கு டிமிக்கி கொடுத்து மேலும்
ஐந்து கொலைகள்
ஏழு வல்லுறவுகளையும் நிகழ்த்தி
வாசகராயன்றி தமது விசிறிகளாகிச் சிலாகித்தவர்களுக்கு
கிளர்ச்சியூட்டியபடியும் இருந்தான்

கிழிந்த குடையொன்றின் கீழிருந்த மரியாவை
முலை சுருங்கிய கிறுக்கச்சியென்றனர்
அந்நெடுங்கதையை வாசித்தவர்கள்
அவளோ
நடைதளர்ந்து அமர்ந்த சாக்கடையோரம்
எப்போதேனும் விழுகிற நாணயங்களை மட்டும்
சேகரித்து வருகிறாள் பல வருடங்களாக
மூக்கைப் பொத்தியவாறே
எல்லோரும் அவளைக்  கடப்பது போல
வாசகர்களும்
கடப்பதை அவள் விரும்பவில்லையெனினும்
கறாராகச் சொல்லியிருந்தான் கதாசிரியன்
பாத்திரப் படைப்பை மாற்ற இயலாதென

நகரில்
கொலைகளும் மாயமாகும் இளம் பெண்களும்
அதிகரிக்க அதிகரிக்க
போலீஸின் கெடுபிடியால் குறைந்தபடியிருந்தது
மரியாவின் தட்டில் விழும் நாணயங்கள்

நாட்பட்ட பசியில் சுருண்டிருந்த மரியாவையும்
மூன்றாந்தர
மதுவிடுதியில் ஒளிந்திருந்த ஜோசஃப்பையும்
அழைத்து வந்திருந்தேன் எனது தோட்டத்திற்கு

பிச்சையெடுத்துப் பிழைக்கவிருக்கும் வாழ்வறியா
மரியாவும்
செய்யவிருக்கிற முதல் கொலைக்கு வெகு அப்பால்
ஜோசஃப்பும்
உயர உயரப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சிகளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
தத்தமது பால்யத்தில்...


அறம் எனும் ரத்தச்சிவப்புக்கனி...
 எதிரெதிர் நின்ற
நம் முகத்துக்கு நேராக
தணுவலான  கிளையில் தொங்கியது
சுவைக்க விலக்கப்பட்ட  கனியொன்று

உருண்டை வடிவினதும் ரத்தச் சிவப்பிலுமான
அக்கனி
எடை சமப்படுகையில்
நேர் நிற்கும் முள்போல்
மையத்தில் நின்றுவிட முனைந்து
மேலும்
கீழும் அசைந்தபடியிருந்தது

செந்நிறம் உண்மை எனவும்
ஒரு நேர்மை உடலாகவும்
கொண்டசைந்த
அக் கனியின் மணம்
நுகர நுகர
எல்லையேயற்ற வெளியாகிவிட்டது அப் பிரதேசம்

அசைந்தடங்கிய பின்
ரத்தச் சிவப்பு மட்டுமே
நம்முன் தெரிந்த அக்கணம்
ஒரு திட்டமோ
முன் யோசனையோ அறவே இல்லை

உந்தப்பட்ட விருப்பத்தில்
அக் கனியை
உதடுகள் பொருத்திக் கடித்தோம்

உண்மையை நானும்
மறுபகுதி நேர்மையை நீயும் விழுங்குகையில்

நழுவி விழுந்து சிதறியது
நடுவிலிருந்த
அறத்தின் சிறு பாகம்.


கொலை மௌனம்
 எப்படியேனும் ஜோசஃப்பைக்
கொன்றுவிட  திட்டமிடுகிறார்கள்
ஜேக்கும் டாமும்

ஜோசஃப்போ
தனித்த வாசனை உமிழும் இருமலர்களைப்
பரிசளிக்க நினைத்திருக்கிறான்
அவர்களுக்கு

இரு மலர்களை
அடையப்போவது குறித்து
அறிந்தேயிராத அவர்களோ
அக்கொலையை நிகழ்த்தும் வண்ணம்
ஒப்பந்தம் செய்கிறார்கள் வேறொருவனை

ஜோசஃப்பின் புகைப்படத்தைப்
பெற மறந்த வேறொருவனோ
அதுவரை ஜேக்குக்கும் டாமுக்கும் தெரிந்தேயிராத
ஒரு ஜோசஃப்பின்
பால்ய நண்பனாகவுமிருக்கிறான்

குறிக்கப்பட்ட அக்கொலைநாளின் மீது
ஜேக்கும் டாமும் நின்றிருக்க
அந்த ஒரு ஜோசஃப்பும்
அந்த ஒரு வேறொருவனும் வந்தபடியிருக்கிறார்கள்

அக்கணம்
நிலவெளி இல்லை
ஆகாசம் இல்லை
வேறெதுவுமேயில்லாமல் நிரம்பியிருக்கிறது
வெறும் மௌனம்

நேருக்குநேராய் சந்தித்த
அப்புள்ளியை வெட்டி
திசைக்கொருவராய் நழுவிச் செல்கிறார்கள்

நான்கு கொலைகளை
இரண்டு மலர்களை
அம்மௌனத்தின் மீது சிதறவிட்டபடி...

கடவுளின் முகவரி
 ஜோசஃப் தேடிவந்த கடவுள் அக் கவிதைக்குள்
சாவகாசமாகச் சாய்ந்து நின்றிருந்தார்
அடி மரத்தின் மீது
அவரிடம் ஜோசஃப் இறைஞ்சுகிறான்
அருள்கூர்ந்து
கடவுளின் முகவரியைத் தெரிவிக்க இயலுமாவென
கண் தொலைவிற்கு அப்பால் தெரிகிற
கவிதையின் எல்லைக் கோட்டினை
கடந்து திரும்பினால் தருவதாகச் சொல்லி
கடவுள்
மறைத்து  வைத்திருந்தார் தன் முகவரி அட்டையை
எல்லை தொடும் பந்தயத்தில் ஜோசஃப்
மூச்சிரைத்து மூச்சிரைத்து ஓடும்போது
வளர்ந்து
வளர்ந்து
நீள்கிறது அவ்வெல்லைக் கோடு
அவ்வழியே
வயோதிகத்தின் பிடியிலிருந்த தன் தாயும்
என்றைக்குமாக கை நழுவிப்போன காதலியும்
சிரித்தபடி கடந்து போகிறார்கள் அவனை
இலக்கை அடைய ஓரடி முன்பாக ஜோசஃப்
சட்டென்று நின்று
பதட்டமுடன் திரும்புகிறான்
காணாமல் போய்விட்டிருந்தார்
மரத்தடியிலிருந்த கடவுள்

தனியே நின்று கொண்டிருந்தது
அக் கவிதைக்குள் ஒற்றை மரம்...

இரவை உண்பவர்கள்
 காலி புட்டியில் அடைத்துப் பரிசளிக்கப்பட்ட
இரவு ஒன்றை
விருப்பம் உந்தப் பருகினார்கள் அவர்கள்

ஒரு யுவதி
யுவன்
நடுவயதினள் தவிர
ஒரு கனவானும்

பருவக் குறுகுறுப்பின் மர்மம் அறிந்தாள்
யுவதி
இரவைச் சுவைத்த பின்
யுவனின் தேடலில் நிர்வாணமடைந்தாள்
ஒரு தேவதை
கொஞ்சம் இரவை விழுங்கிய பிறகு
சற்றே நீண்ட கள்ளப் புணர்வில்
கண்ணீர் மல்கி விம்மினாள்
நடுவயதுக்காரி மேலும்
அவ்விரவைக் குடித்த
பெருந்தொப்பைக் கனவான்
மல்லார்ந்தபடி ஸ்கலிதமடைந்தான்
அள்ளக் குறையாச் செல்வத்தின் மீது

ஒரு மிடறே சரித்த
சிறுமியின் கனவிலோ
காட்டுமலர்கள் விரிந்த
கானக அதிகாலையாய் புலர்கிறது
புட்டிக்குள் அடைத்திருந்த மீதி இரவு...


(அறம் என்னும் ரத்தச்சிவப்புக்கனி  - சம்பு - சந்தியா பதிப்பகம் - மு.ப.2012 - ரூ.70 )

No comments:

Post a Comment