Sunday, 31 March 2013

என்றுதானே சொன்னார்கள் - சாம்ராஜ் 
                     

பாபநாசம் கடற்கரை, வற்கலா

தரையில் உருளும்
காலி ஐஸ்கிரீம் கப்புகள்.

ஐந்து நட்சத்திர விடுதியில்
கண்ணாடி ஜன்னல்வழி
கோப்பைகள் உயர்த்தியபடி
அய்ரோப்பியக் கண்கள்

சுருட்டிவிடப்பட்ட
பேண்ட்களில் பிதுங்கும் கெண்டைக்கால் சதைகள்

நோக்கமற்று
இடமும் வலமும் ஓடும் நாய்கள்.
மீன் மிச்சம் தேடி
பலிசோறு புறக்கணித்து
பறக்கும் காக்கைகள்.

இவர்கள் சாட்சியாக
உச்சிவெயிலில்
மண்பானையில்
நீருக்குள் போவதும் நிலத்திற்கு மீள்வதுமாக
அலையாடியபடி
கரைந்து கொண்டிருக்கிறார்கள்
சாம்பல்வடிவ பித்ருக்கள்.


தாமஸ் தெரு, கோட்டயம்

கொடியில்
வெள்ளை அங்கிகள் படபடக்கும்
மோன அமைதியெங்கும்.
நேர்த்தியாய் வெட்டப்பட்ட புற்களும், செடிகளும்,
பறவைகளும், பயபக்தியாய் பறந்தமரும்.
பியானோவில் கசியும் ஆகம சங்கீதம்.
சிலுவையில் குருதி சிந்தும் கர்த்தன்.
கைப்பிடிச்சுவருக்கு அப்பால் கிடக்கும்
விஸ்பர்களும், விசும்பல்களும்.


ஆதி ஆப்பிள் மீதம் உண்டவர்கள்

மாலைப் பிரார்த்தனை நேரத்தில்
மடத்தின் பின் வாசலருகே
புணர ஆரம்பித்தன நாய்கள்.
இரும்புக்கதவை இழுத்து மூடினாள்
கன்னியாஸ்திரி.
அந்தரங்கம் அனுமதித்ததற்கு நன்றி சொல்லி
மேலும் சந்தோசமாய்ப் புணர்ந்தன
இந்திரன் உடம்பாயிற்று
இரும்புக் கதவு.


நதிப் புராணம்

1

பகலில்
வேட்டிகள் காய்ந்து கொண்டிருக்கும்.
இருட்டிய பின்
சாராயம் கிடைக்கும்.
தூமைத் துணிகளும்,
பாலித்தின் சிதறல்களும்,
காற்றில் பதைபதைக்கும்.
மண்ணைத்தோண்டினால் நிரோத்தும்
உடைந்த குப்பிகளும் சுரக்கும்.
பித்ருக்களின் பிண்டங்கள்
சாக்கடையில் கரையும்.
வருடத்திற்கொருமுறை
சாமி
கணுக்கால் நனைத்து விட்டுப்போகும்.
இதை வைகைநதி
என்றழைப்பது எம் நாவழக்கம்.

2

படித்துறை என்ற சொல்லுக்கும்
தண்ணீருக்கும் சம்பந்தமில்லை.
வெங்காயத் தாமரைகளில் நீந்துகின்றன
எருமைகள்.
காலை நேர மலங்கழிப்போரின்
பிறப்புறுப்புகளைப் பார்த்து
விக்கித்துப் போயிருக்கிறது
நடுத்திட்டு லிங்கம்.

தன் யோனியில் துளையிட்டு
தன் மீதே பாயும்
தண்ணீரைக் காணச் சகியா நதி
எப்பொழுதோ தற்கொலை செய்துகொண்டது
இருப்பது நதியின் சவம்
அல்லது
சவங்களின் நதி.


அகலாது அணுகாது


செவ்வாக்கியம் அத்தை
தல்லாகுளத்தில்
சின்ன வயதில் தாலியறுத்தவர்களில்
முதன் முதலாய் உள்பாடியணிந்தவள்.

பால் வாங்க
செருப்பு போட்டுக் கொண்டுதான் போவாள்.
நாள் முழுக்கத் தெருவிற்கும் வீட்டிற்கும்
தண்ணீர் பிடித்துக் கொண்டு அலைவாள்.
பிடிச்சு பிடிச்சு அவ வீட்டுக் கிணத்துல
கொண்டு போய் ஊத்துறா பாடைல பொறவ
என்பாள் பேச்சி சின்னம்மா.

ஒரு சித்திரை மதியத்தில்
தீவைத்துக் கொண்டாள் அத்தை.

கிணற்றுக்கான கதவை உடைக்க முடியாமல்
சாக்கடைத் தண்ணீரை அள்ளி ஊற்றினார்கள்.
நாறியதால் ரொம்பநேரம் பெரிய ஆஸ்பத்திரியில்
வெறுமனே போட்டு வைத்திருந்தார்கள்.
பொங்கல் வைத்த அடுப்பாய்க் கிடந்த்து உடம்பு.
கிணற்றை மூடிவிட்டார்கள்.
அக்கினி நட்சத்திர நாட்களில்
அம்மாச்சியின் ஒப்பாரியில் மாத்திரம்
வெறும் குடத்தோடு
வேறொரு தெருவில் நடக்கிறாள் அத்தை.

(என்றுதானே சொன்னார்கள் – சாம்ராஜ் – சந்தியா பதிப்பகம் – சென்னை – மு.ப.2012 - பக்கம் 56 – விலை ரூ.40 )

1 comment:

  1. நவீனக்கவிதைகளில் இப்படி சமூகக்கருத்துக்களையும், இலக்கியத்தின் இயல்பான சமூகத்தின் பிரதிபலிப்பை செவ்வனே செய்திருக்கிறது "என்றுதானே சொன்னார்கள்" தொகுப்பு. சாம்ராஜ் அவர்களின் எழுத்து இந்தகையே பாணிபோக்கு வரத்தில் செல்ல வாழ்த்துகள். வாலிதாசன்.

    ReplyDelete