Saturday, 2 March 2013

நிலத்தோடு பேசுகிறேன் - ஏ.ஏ.பைசால்

நெருப்புக் குழந்தை

தீயை தரையில் இறக்கிவிடும் அவசரத்தில்
விரைவாக வருகிறாள் ஒருத்தி

கைகளில் இருந்த தீயை இறக்கி நிலத்தில் விடுகிறாள் விளையாட
தீ ஓடிப்போகிறது குப்பையை நோக்கி
எப்போதும் பசியில் இருப்பது இந்த தீ

குப்பை எரிகிறது
இன்னொருத்தியின் காதல் கடிதம் எரிகிறது
அழுக்குகள் சுமந்து அருவருப்பை சம்பாதித்த
துணிகள் எரிகின்றன
காய்ந்த பப்பாசி இலைகள் எரிகின்றன
அதில் குடியிருந்த ஒரு நீளமான உடல்கொண்ட புழு
உலகம் அழிகிறது என்று சொல்லி தன் இறுதி மூச்சை விடுகிறது

இரவெல்லாம் கட்டிக்கொண்டு புரண்ட பனிப்போர்வையை
தீயின் தலையில் போடுகிறான் தலைவன்.
தலைவி தன் மேனி கொதிக்க
தலைவனை ஆசையோடு பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

காலைப் பனி எரிகிறது
தீ தனது உள்ளாடையை கழற்றி வீசுகிறது
அதன் உள்ளாடை ஆகாய மேகத்தை ஒத்திருக்கிறது

நிர்வாணமாக நின்று எரியும் தீயைப் பார்த்து
தன் காதல் நினைவுகளை மீட்டுகிறாள் தலைவி.

•   

உணவு

எனக்கு ஏழு நாட்களாக உணவில்லை
நான் இருக்கும் சுற்றுவட்டாரமெல்லாம் சுழலும்

சமயல் வாசனை மூக்கைத் தூக்கி என்னிடமிருக்கும்
பீங்கான்களில் மிக நல்லதொன்றின் மேல் வைத்துவிடுகிறது

மழை வானத்தை இருட்டிக்கொண்டு வரும்;
நித்திரை என் கண்களை இருட்டிக்கொண்டு வரும்.
உணவில்லாததால் தலைச்சுற்றும் இருக்கிறது.

வீதியோரம் தலைக்கு பீங்கானை வைத்து
உறங்க ஆரம்பிக்கிறேன்.

ஈச்சம் பழம் வேண்டுமா உனக்கு
என்ற குரல் எனது செவிக்குள் குரங்குபோன்று பாய
எழுந்திருக்கிறேன்.

அவள் கைகளில் இருக்கும் ஐந்து விரல்களையும்
ஒன்றிணைத்து என் கையில் வைக்கிறாள்
அது என் வலக்கரம்
என் வலக்கரத்தில் ஈச்சை மரம் ஒன்று பழங்களுடன்
நிற்பதைக் காணுகின்றேன்.
•   

எறும்புகள்


வீட்டுச் சுவரில் ஒரு பகுதி உலக வரைபடம் போல்
வெடித்திருக்கிறது
கால் நகங்களையும், கை நகங்களையும்
வெட்டி அலங்கரித்துவிட்டு
மழிதகட்டை
உலக வரைபடப் பாதையில் நிறுத்திவைப்பார் தந்தை.

பீடித்துண்டுகள் பாதையின் நடுவே நிற்கும்
இன்று
யாருக்கும் எங்கும் செல்ல முடியவில்லை
எல்லோரும் திரும்புவோம்
என்று வரிசையின் முதலில் வந்த எறும்பு
தன்னைப் பின் தொடர்ந்து வந்த எல்லா எறும்புகளுக்கும்
தகவல் அனுப்புகிறது.

என் தலையில் இருக்கிற தேங்காய் மூட்டையை
யாராவது கை மாறுங்கள்.
என் தலையில் இருக்கிற அரிசி மூட்டையை
யாராவது கை மாறுங்கள்.
தயவு செய்து கை மாறுங்கள்.

என்று கூச்சலிடும்போது எறும்புகளின் அணிவகுப்பு
சற்று குழம்பிவிடுகிறது.
தின்னையில் உறங்கிக்கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தையின்
தூக்கம் கலைந்து குழந்தை அழுகிறது.
தாய் பதறியடித்து ஓடிவருகிறாள்
மீண்டும் அணிவகுப்பை சீர் செய்துகொள்கின்றன எறும்புகள்
பாலைவனத்து ஒட்டகங்களின் நினைப்போடு

கண்கெட்டுப்போன எறும்பு கடிச்சிருக்கு
என் செல்லத்துக்கு
தாய் எறும்புகளைத் திட்டுகிறாள்
இந்த திட்டு மூட்டையை யாராவது கை மாறுங்கள்
என்றது ஒரு எறும்பு
•   

திசை எனும் வாகனங்கள்


திசைகள்
தன் கால்களையும்,கைகளையும்
அகல விரித்து தெருவெல்லாம் கிடக்கின்றன .

நான் திசைகளைப் பாதங்களில் அணிகிறேன்
அது பறாக்குக் காட்டி என்னை கூட்டிச்செல்கின்றன.

போகும் வழியில்
பள்ளிக்கால நண்பனைக் கண்டு 
கொஞ்சம் அவனோடு பேசிக்கொண்டிருக்கிறேன்.
விடைபெறும் நேரத்தில்
அவனிடமும் ஒரு திசையை வாங்கிக்கொண்டேன்.
அது வைத்திய சாலைக்குப் போகும் திசை

என் எதிரில் ஒரு திசை
மண்ணில் உறுண்டு புறண்டு என் முகத்தை ஆவலாகப் பார்க்கிறது
அது என் காதலியின் வீட்டுக்குப்போகும் திசை
அது என் கழுத்தை இறுக்கி என்னைக் கைதி செய்கின்றது.

இப்போது நான்
திசைகளை கடலில் கொண்டுபோய் கரைக்கின்றேன்.
கடலுக்குள் இறங்கிய ஒரு திசை
முதலாம் கடலை முதுகில் ஏற்றிக்கொண்டு
சீனா செல்கின்றது.
அங்கேயும் ஒருவன்
கடல் நீரில் திசைகளைக் கரைத்துவிட்டு
வெளிறிய கால்களுடன் திரும்பிச் செல்கின்றான்

புதிய திசைகள்
அவனது கால்களில் ஒட்டிக்கொள்கின்றன                            

•   

வீடு என்மேல் கோபமுடன் இருக்கிறது


பகல் சரியாக பன்னிரெண்டு மணியும்
சொல்ல முடியவில்லை சில நிமிடங்களும் இருக்கும்
வீடு திரும்பியிருந்தேன்
என் வீடு தன் முதுகுப் புறத்தைக் காட்டிக் கொண்டுடிருந்தது

எல்லாக் கதவுகளும்
ஒன்றன் பின் ஒன்றாக நகர்ந்ததைக் கண்டு
என்னைச் சந்திக்க வந்த நண்பன்
திரும்பிச் சென்றதாகவும்
தொலை பேசியில் இப்போதுதான் சொன்னான்.

என் வீட்டுக் கதவுகளுக்கு
பாடல் என்றால் நல்ல விருப்பம்
பாடிக் கொண்டு துவிச்சக்கரவண்டியின் சாவியால்
திறந்தால் அமைதியாக திறந்து கொள்ளும்

இன்று என்ன நடந்திருக்கும்
கதவுகளெல்லாம் மூடப்பட்ட நிலையில்
புறமுதுகு காட்டி நிற்கிறது என் வீடு

நேற்று மனைவி என்னோடு சண்டை பிடித்தாள்
உன்னை எனக்கு யார் காட்டித் தந்தது
அவர்களை இப்போது கண்டு நாலு வார்த்தை கேட்கணும்
அந்த நாலு வார்த்தைகளுடன்
அவர்களைச் சந்திக்கச் சென்றிருக்கலாம் அவள்
என் வீட்டையும்ää வாசலையும் தனியாக்கிவிட்டு

நான் சோகப் பாடல் பாடினேன்
காதல் பாடல் பாடினேன்
கதவு திறந்த பாடில்லை
வீதிகளில் பேய் உலாவுகிற பாடலைப் பாடினேன்
நாய் ஒன்று தறுணத்தில் குரைத்தது
கதவைக் கைகளால் தொட்டேன்
வெட்கத்தில் பின்னே நகர்ந்தது என் காதலி போல

வீட்டினுள்ளே மனைவி.
உறங்கிக் கிடக்கிறாள்
என நினைத்து அவளை நெருங்கினேன்
இல்லை
அவள் மரணித்துக் கிடக்கிறாள்.

(நிலத்தோடு பேசுகிறேன் – ஏ.ஏ.பைசால் – புது எழுத்து – மு.ப.2012 – ரூ.60)

No comments:

Post a Comment