Wednesday, 27 February 2013

தீ உறங்கும் காடு - சக்தி ஜோதி

நிசப்தம்

 


அதன் பிறகு 
அந்த இரவில்
மழை பொழியவேயில்லை
அதன்பிறகு
அந்தக் குரலில் நான் விழித்திருக்கவேயில்லை
அதன் பிறகு
எனது விழித்திருக்காத இரவில் ஆடைகளை களையவேயில்லை
அதன்பிறகு
நிர்வாணத்தைக் காணவேயில்லை அவன்
வலியைப்  பரிசளிக்கும்
ஓர் இரவைக் கடப்பதும்
மழையற்ற  கோடையைக்   கடப்பதும்
நிர்வாணமற்ற   இரவைக் கடப்பதும்
குருதி வழியாத ரணமென உணராத அவன்
மழை பொழிவதற்கான தருணம் இதுவென உதிர்ந்த இலையொன்றுவறண்டதும் தண்ணீரற்றதுமான நிலத்தில்
தரையிறங்கி அலைந்து திரியும்
பறவையென
தவிப்புற்றுக் கிடக்கிறது மனம்
அவனுக்கென
உடலின் வாசனையை முகர்ந்து கடக்கிறது
உதிந்த இலையொன்று
தரை விழுந்து நொறுங்கும் அதன் சப்தம்
மிக அருகில் கேட்கிறது
அவன் நடந்து வருகிறானா
அல்லது
பறவையின்
மிருகத்தின் கால்களில் மிதிபட்டதா
தெரியவில்லை
நீரற்றுக் கிடக்கும்   நிலத்தின்
தகிப்பின் நடுவே கிடக்கிறேன்
காய்த்துப் பழம் தரும் விதைகளை ஏந்தியபடி


தீ உறங்கும் காடு


அந்த மந்திரக்காரன்
வனம் முழுக்கப் மரங்களைப் பூக்கச் செய்கிறான்
பூக்களுக்கு வகைவகையான நிறங்களையும்
நிறங்களுக்கு தனியொரு வாசனையையும் தந்து
மாயங்கள் நிகழ்த்துகிறான்

மேடும் பள்ளங்களும் கரும்புதர்களும்
மாயங்களை அறிந்தவனை மயக்குவதில்லை
வனத்தை உணர்ந்த அவனே
நிலத்தை நெகிழச்செய்கிறான்

காதலின் வாசனையை உணர்கையில்
அவனைத் தேடி அலைகிறேன்
மாய கானகத்தில்

வனமே அலைகையில்
அவன்
கூடுவிட்டு கூடு பாய

காடு பற்றியெரிகிறது
கானகப் பச்சை அழியத் துவங்குகிறது
பறவைகள் தடுமாறிப் பறக்கின்றன
கால சர்ப்பம் ஊர்ந்து வெளியேறுகிறது

ஆடைகளை களைகிறேன் சர்ப்பம்போல
மனமிருகங்கள் வெளிக்கிளம்பின ஒவ்வொன்றாக
வனம் பற்றிய பெரும்நெருப்பு
சுட்டெரிக்கும் முன்பு
நம்புகிறேன்

வனநிலம் அறிந்த ஊற்று
வற்றாமல் பெருகி
நெருப்பை அணைக்குமென

பொங்குகிறது குழிநெருப்பு
அசைகிறது காடு.
·     


வசந்த காலத்தின் நள்ளிரவில்


கானகத்தின் நடுவே
பழமையின் மரங்கள் சூழ்ந்திருந்த  மைதானத்தில்
சுலுந்தங்குச்சிகளில்  பந்தங்கள்  எரியத் துவங்கின

இலவம் வெடித்திருக்க
விரியக் காத்திருக்கும் கோங்கம் பூக்களின் 
குவிந்த  இதழினுள் தாது அடர்ந்திருக்க
புற இதழ் கருத்த தூய வெண்பாதிரி பூக்கள் வாசம் பரப்ப

அப்போதுதான் மலரத்துவங்கும்
செங்காந்தள் மலர்க்கொடியை தன்மேல் படரவிட்டிருந்த  அவன்
அவளைத் தேர்ந்திருந்தான்

அவளின் இமைகள் கிறங்கிக் கிடக்க
மதனமேடையில் நடனமாடத் துவங்கினான்
மூங்கில் காடுகளில் புகுந்தசைந்த காற்றால்
அவளை இசைத்தான்

வனத்தின் அசைவும்
காட்டாற்றின் ஓசையும்
பறவைகளின் சிறகடிப்பும்
இயைந்திட
உடல் ஆடினான்

இருள்
அவனது நடன அதிர்வில்
வெளிச்சமென பெருக
சுலுந்தங்குச்சி நெருப்பாய் அவன்

முன்னும் பின்னும் அசைந்த காலத்தில்
காய்ந்த மரத்தின் உதிர்ந்த செம்பூவென பற்றியெழுந்தாள்
வெடித்த இலவம் காற்றில் மிதந்து கடந்து
புராதன வேர்களை பரப்பியது நிலமெங்கும்

காலத்தை
நெருப்பின்வழி கடக்கும்போது

நடுநிசிக் கிளைகளில் பறவைகள் மறைந்தன


கரிய மேகமாகும் கூந்தல்


எனக்கு மெல்லிய  கூந்தல் எனச் சொல்லுவான்

நான் கூந்தலினால் ஆனவள் அல்ல
அது எனக்கு சுமை 

கரும் மேகங்கள் போல
அடர்ந்த என் கூந்தலை
நீரால்  அலம்பி
காற்றால் கோதி
பின் அதை பின்னிப்  பின்னி
ஒழுங்கு செய்கிறேன் ஒவ்வொருநாளும் 

வாசனைத் திரவியம் கொண்டு நிரப்புகிறேன்
கூந்தலிலிருந்து   வாசம்  பரவுகிறது

அவன் விரும்புகிறான் என்பதாலேயே
சுமக்க முடியாத இந்தக் கூந்தலை
சுமந்து கொண்டிருக்கிறேன்

கூடவே சுமை கூடியதால் நோயுற்றது என் மனதும்

காற்றில் படர்த்தி 
மேகங்களுடன் மேகமாய்
அலைந்திடும்
வாசனையும் அலங்காரமுமற்ற
என் கூந்தலில்
லயித்திருக்கும் மனதுடன் .  (தீ உறங்கும் காடு - சக்திஜோதி - உயிர் எழுத்து - மு.ப.2012, விலை ரூ.90)

No comments:

Post a Comment