Monday, 25 February 2013

நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன் - அபி மதியழகன்

நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன்


அடர்ந்த சாம்பல் நிறமாய்க்
கவிந்த மாலையில்
பட்சிகள் உச்சமாய் ஆர்த்தும் அனங்கியும்
தமது கூட்டுக்குள் மெல்லப் புகுந்தன

பின்னர் பரந்த வெளியெங்கும்
பேரமைதி நிறைந்திருக்க
இருளின் நீள் கரங்கள்
விஷமப் புன்னகயொன்றைச் சிந்தி
சத்தமின்றி பீடத்தில் ஏறின

இருள் துவங்கியதற்கான அதிகாரபூர்வ
அறிவிப்பொன்றை வழக்கம் போலவே
தத்தமது வசிப்பிடங்களிலிருந்து
விலங்கினங்கள் உரத்து வெளியிட
நகரின் சாலையெங்கும் விளக்குகள் ஒளிர்ந்தன

வாகனங்கள் முன்னிலும் வேகமாய்ப்
புகையை வெளியேற்றி
தலைதெறிக்க ஓடவாரம்பித்தன

அவ்வப்போது இடைஞ்சலாய்த் தோன்றும்
வெளிச்சப் பகுதியிலிருந்தும் ஒதுங்கி
கெட்டியாய்த் தெரியும் அடரிருட்டில்
அரிதாரம் பூசிக்கொண்ட ரகசியங்கள்
களிநடம் புரிந்து
தம்மைக் கொண்டாடிக் கொண்டன

மொக்குகள்
வலியைத் தாங்குவதற்கான ஆயத்தங்களை
மலர்ந்த பூக்களிடமும்
நேற்றைய அனுபவத்தைக் கண்ட இலைகளிடமும்
கேட்டுக் கொண்டன

ஆதிகாலமாய்
விஷமருந்தியே உயிர் வளர்த்த
சந்தேகங்கள் பின்னங்கால் அடிபட
திசையெங்கும் ஓடிக் கனத்துக் களைக்கின்றன

ஓடையாய்ச் செல்லும்
தெளிந்த நீரின் குறுக்காக
நடந்து செல்லும்
துர்தேவதைகளின் காலடி ஓசைகள்
இருளின் அமைதியைக் குலைக்கின்றன

அப்போது இருள்
ஒருமுறை அதிர்ந்து
சிறுகீறலாய் வெடிப்புற்று
பின் பெரும் பிளவாய் உருக்கொள்கிறது

கவுச்சி வீசும்
அழுக்கு நீரினின்றும்
பனிக்குடம் கிழித்து
வெள்ளி முளைத்த வானில்
அறிகுறியாய்த் தெரியும் பகலைச்
சபித்துப் பிறக்கிறது
ஒரு சிசு.


நதி என்று...

வற்றிய மணற்பரப்பாகவே எப்போதுமிருக்கிறது
பேருந்துப் பயணங்களின்போது
இவற்றைக் கடக்கையில்
இதுதான் நதி என்று பிள்ளைகளுக்கு
அறிமுகம் செய்ய மனமில்லை

நகரத்தில் சாக்கடை வடிகாலாக...
எங்காவது தேங்கி நிற்கும் நீர் நிலைகளில்
நகரத்து வாசிகளின் உடைகளை
வெண்மையாக்கித் தருகிறான் துவைப்பவன்
சிற்றூர்களில் கழிப்பிடங்களாக...
கரைமேலிருக்கிற வயற்பரப்புகள்
காரித்துப்புகின்றன மனித முகங்களில்

நேற்றொரு பேருந்துப் பயணத்தில்
நதியைக் கடக்கையில்
நதியின் சாக்கடையில் நாய்கள் சில
துள்ளித்துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன

நதியைப் பற்றி
நாய்களுக்கென்ன
கவலை இருக்க முடியும்?!

ஆயா எப்ப‌வாவ‌து ஊருக்கு வ‌ரும்.
த‌லையில‌ ஒரு மூட்டை
இடுப்புல‌ ஒரு பையி
விடிகாலைல‌ கிள‌ம்பி
ப‌த்த‌ர‌ ப‌தினொன்ர‌ மணிக்கு வ‌ரும்.
ப‌ஸ்ஸுல‌ இற‌ங்கி ரெண்டு மைலு
ந‌ட‌ந்தேதான் வ‌ரும் வெயில்ல‌
செருப்பாவ‌து ஒண்ணாவ‌து
பொடி சுடுந்தான்
பேர‌ப் புள்ளுவ‌ வூட்ல‌ இருக்கிற‌
நாயித்துக் கிய‌‌மையா பார்த்து வ‌ரும்
அவிச்ச‌ த‌ட்ட‌ப்ப‌யிரு, ப‌ச்சப்ப‌யிரு
அப்ப‌ப்ப‌க்கி கிடைக்கிற‌
கெளாக்கா  ஈச்ச‌ம்ப‌ழ‌ம்  வெள்ள‌ரிப்ப‌ழ‌ம்ன்னு
சும‌ந்து வ‌ரும்
வெல்ல‌ம் சேத்து இடிச்சி புடிச்ச‌
ப‌ச்ச‌ப்ப‌யிருருண்டை பெரிசா அஞ்சாறு
வேக‌வ‌ச்சி கொஞ்ச‌ம், வ‌றுத்து கொஞ்ச‌ம்ன்னு
ம‌ல்லாட்ட‌ இருக்கும் பையில‌
"
புள்ளுவ‌ ஆச‌யா சாப்புடும்"ன்னு
எடுத்து எங்க‌கிட்ட‌ கொடுத்து
நாங்க‌ ஆச‌யா சாப்புட‌ற‌த‌ பார்த்து
பூரிச்சி சிரிக்கும் ஆயா.
செருவாடு சேத்த‌த‌ எடுத்து கொடுக்கும் என்கிட்ட‌
சுருக்கு பையில‌ அன்னிக்கே இருக்கும் 100 ரூவா
"
இந்தாய்யா,  வ‌ச்சிக்க‌ ஏதாவ‌து வாங்கித் தின்னு"
வ‌ந்தா ஒரு அர‌ ம‌ணி நேர‌ம்
க‌ட்டிட்டு இருக்கிற‌ நூல் புட‌வைத் த‌லைப்பை
அப்ப‌டியே விரிச்சி
ம‌ண் த‌ரையில‌ ப‌டுத்துக்கும். அச‌தி.
"
ஆடு மாடுவ‌ள‌ அப்ப‌டிஅப்டியே வுட்டுட்டு வ‌ந்தேன்
கெள‌ம்புற‌ன்யா"ன்னு சொல்லும் ம‌திய‌ம் சாப்ட‌வுட‌னே.
"
ச‌ரி"ன்னு சொல்லிட்டு வெள‌யாட‌ப் போயிருவோம்.
'
ஆயாக்கு டாட்டா காட்டு'ன்னு
கேட்டு வாங்கிக்கும்
அத்த‌னை ச‌ந்தோஷ‌ம் அதுக்கு
நாங்க‌ டாட்டா காட்டுற‌தில‌.
"
ந‌ல்லா ப‌டிங்க‌"ன்னு சொல்லிட்டுப் போன‌ ஆயா
இப்ப‌ இல்ல‌.
க‌ட‌சீயா மூஞ்ச‌க் கூட‌ பாக்க‌ முடியாம‌ப்போச்சு.
"
இப்ப‌க் கூட‌ எங்க‌ள‌ நென‌ப்பியா ஆயா?’


மேக‌த்திலிருந்து இற‌ங்கி வ‌ந்த‌தாய்ச் சொன்னாய்
வெள்ளுடை த‌ரித்து முற்றிலும் நனைந்திருந்தாய்
ப்ர‌த்யேக‌மாய் உன‌க்கென‌ வைத்திருந்த‌
பூப்போட்ட‌ ட‌வ‌ல் ஒன்றினால்
துவ‌ட்டிக் கொள்ள‌ச் சொன்னேன்
பிற‌கு சிரித்தாய்
சிரிப்பினூடே க‌ண்க‌ள் க‌ல‌ங்கின‌ உன‌க்கு
உன‌க்கென‌த் தேநீர் த‌யாரிக்க‌ச் சென்ற‌ போது
நான் ம‌ட்டும் உற‌ங்க‌வென‌ இருக்கிற‌ க‌ட்டிலிலிருந்து
த‌ள்ளி வெளியில் இருந்து க‌ற்றையாய் விழுகிற‌
சூரிய‌ வெளிச்ச‌த்தில் சுவ‌ரில் சாய்ந்து
கால்க‌ள் நீட்டி உட்கார்ந்து கொண்டாய் -
சில‌ நாட்க‌ளாக‌வே பெருக்கியிராத‌ த‌ரையில்.
ப‌ர‌ப‌ர‌ப்பும், பெருவ‌லியும் தெரியும் உன்னை
சூரிய‌ ஒளி ம‌ஞ்ச‌ள் ப‌ழுப்பாய் விளிம்புக‌ள் காட்டிற்று.
துய‌ர‌ங்க‌ளை சும‌ப்ப‌து எல்லோரும்தான் என்ப‌தை
நான் சொல்ல‌வில்லை.
புத்த‌க‌ம் ஒன்றினை எடுத்து வாசிக்க‌ முய‌ல்கிறேன்.
நீ எழுந்து போயிருக்க‌லாம் எப்போதேனும்.
புல்லாங்குழ‌லிசையை மிக‌ நேர்த்தியாக‌
வாசித்துக் கொண்டு
உச்சி வெய்யில் காய்ந்த‌ தெருவில்
சென்று கொண்டிருந்தாள்
க‌ழைக்கூத்தாடிப் பெண்ணொருத்தி

தொட்டி மீன்கள்...

மீன்களைத் தொட்டியில் வைத்து பராமரிக்கிறான்
தமக்கிருக்கும் நீரின் அளவிலும்
கண்ணாடிச் சுவர்களின் விஸ்தீரணத்துக்குள்ளும்
பல வண்ணங்களில் நீந்திக் களித்து
வளைய வருகின்றன அவை.
வரவேற்பறைகளை கவுரவிப்பதாகவும்
அந்த இல்லத்திற்கவை பெருமை சேர்ப்பதாகவும்
அடிக்கடி நினைத்துக்கொள்கிறான்.
அதில் பெருமகிழ்வுமுறுகிறான் அவன்.
பருத்தும் பெருத்தும் விடாத படிக்கான
சிறப்பு உணவுகளை அளித்து
அச்சிறு கூண்டுக்குள் தினப்படிக்கு
செவ்வனே நிர்வகிக்கிறான்.
கண்ணீரைக் காட்டிக் கொள்ளாத படிக்கு
நீரிலேயே அழுகையைக்
கரைத்துக்கொள்கின்றன மீன்கள்.
ஆயினும்
அச்சமும் பதைபதைப்பும் நிறைந்த
விசித்திர மனோபலத்தோடு அவற்றை
கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.
எப்போதும் கண்ணாடிகளுடைத்தவை
வெளிப்படுமோவென!
--------------------------------------------நீர்த்துளிகள் ஒட்டாத மின்னுகிற கருஞ்சரீரம்

  வா. மணிகண்டன்


கவிதைகள் பற்றி பேசும் போது கவிதைக்கான வரையறை இருக்கிறதா?” என்ற கேள்வியும் கூடவே திரிந்து கொண்டிருக்கும். இது முக்கியமான கேள்வியும் கூட. கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பேசுவதும், எழுதுவதும் கவிதையை பற்றி புரிந்து கொள்வதற்கான முயற்சிதானேயொழிய இதுதான் கவிதைஎன்று யாராலும் வரையறை செய்துவிட முடியாது என்று நம்புகிறேன். அப்படி செய்யப்பட்ட வரையறைகள் கூடிய விரைவாக நெகிழ்ந்துவிடக் கூடும் அல்லது புதிய வாசகன் அனாயசமாக தாண்டிவிடக் கூடும். ஒரு கட்டுரையின் முதல் பத்தியை தொடங்குவதற்கான சம்பிரதாயமான வரிகளாக இதைச் சேர்க்கவில்லை. 

அபி மதியழகனின் நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன்தொகுப்பின் கவிதைகளை வாசிக்கும்போது தோன்றியதுதான் இது. நவீன கவிதைகளுக்கான வரையறைகள் என சிலவற்றை கற்பிதம் செய்து வைத்திருக்கிறேன். எனக்கு நானே உருவாக்கிக் கொண்ட அல்லது பிறரிடமிருந்து கற்றுக் கொண்ட பல கோட்பாடுகளாலான வரையறை இது. ஆனால் எனது கோட்பாடுகளுக்குள் அடக்கிவிட முடியாத கவிதைகளாக மதியின் கவிதைகள் இருக்கின்றன. பிறகு எப்படி இவற்றை நவீன கவிதைகள் என்று முன்வைத்து பேச முடியும் என்ற குழப்பம் வந்தது. 

இதே குழப்பம் முன்பொரு சமயம் வந்திருக்கிறது. அது மு.சுயம்புலிங்கத்தின் கவிதைகளை வாசிக்கும் போது. அப்படியானால் சுயம்புலிங்கத்தின் கவிதைகளுக்கும், அபி மதியழகனின் கவிதைகளுக்கும் இடையில் சம்பந்தம் இருக்கிறததுதானே? ஆமாம் இருக்கிறது. இரண்டும் மண்ணின் கவிதைகள். அதாவது மனிதர்கள் வாழும் கவிதைகள். ஆனால் இந்த இடத்தில் சுயம்புலிங்கம் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. எதற்காக இந்த சம்பந்தத்தை குறிப்பிடுகிறேன் என்றால், சுயம்புலிங்கத்தை எந்த விதத்தில் பிடித்த கவிஞராக ஏற்றுக் கொள்கிறேனோ அதே காரணத்திற்கான பல அம்சங்களை மதியின் கவிதைகளில் பார்க்கிறேன் என்பதை சொல்வதற்காக.

மதியின் கவிதைகள் மொத்தமும் மண்ணின் கவிதைகள் என்று சொல்ல முடியாது. ஆனால் என்னளவில் அவைதான் முக்கியமான கவிதைகளாக இருக்கின்றன. அம்மா என்னும் ஓர் ஊழியக்காரி (அ) குல தெய்வப்படையல் என்னும் ஒரு கவிதை ஒன்று போதும்- உதாரணமாகச் சொல்வதற்கு. நகரத்திற்கு குடியேறி வந்துவிட்ட மகனுக்கும், தனது ஊரை விட்டு வராமல் இருமலோடு போராடிக் கொண்டிருக்கும் தாய்க்குமான தொலைபேசி வழி உரையாடல்தான் கவிதை. பேச்சு வழக்கில் நகரும் இந்தக் கவிதை வெறும் செண்டிமெண்ட்தெறிப்பாக தொக்கிவிடுவதற்கான அத்தனை வாய்ப்புகள் இருந்தும் தாண்டி வந்திருக்கிறார் மதியழகன். தாண்டி வருதலுக்குத் தேவையான Poetic essence ஐ துல்லியமாக கவிதையில் சேர்த்திருக்கிறார். 

அதே போல அதென்ன வாரி என்ற கவிதையை lighter poetry என்பதற்கான உதாரணமாக சுட்டிக்காட்டலாம். அவர்களது ஊரில் இருக்கும் ஒரு இடத்தை அம்பட்டன் வாரி என்கிறார்கள். அம்பட்டன் வாரிகிட்ட நில்லு” “அம்பட்டன் வாரில போய் குளிச்சிக்கலாம்என பெரும்பாலும் அம்பட்டன் வாரியைத்தான் அடையாளமாகச் சொல்கிறார்கள். அந்தக்காலத்தில் முதன்முதலாக ரோடு போட்டதில் ஆரம்பித்து கலியன் என்ற அம்பட்டனின் வாழ்க்கைவரை நிறைய செய்திகள் கவிதையில் இருக்கின்றன. இவையாவும் சுவாரசியமான செய்திகள். ஏதோ ஒரு நிலப்பிரச்சினைக்காக தென்னார்க்காடு ஜில்லாவின் பழைய மேப் ஒன்றை பார்க்கிறார் கவிதை சொல்லி. மேப்பில் அந்த இடம் ஹாமில்டன் வாரி என்றிருக்கிறது. அப்படியானால் அம்பட்டன் வாரி என்பது என்ன? இரண்டும் ஒன்றேதான். ஹாமில்ட்டன் வாரி என்பதுதான் மருவி அம்பட்டன் வாரி என்றாகியிருக்கிறது. கவனித்துப்பார்த்தால் கடைசி வரி மட்டும்தான் கவிதைக்கான அடிப்படை. ஆனால் இந்தக் கவிதையில் தான் ஆறாம் வகுப்பு படித்த போது இருந்த ஊரின் சித்திரத்தை கொண்டு வந்திருக்கிறார். மிக எளிமையாக இருக்கிறது. வாசிக்கும் போது ஆசுவாசமாகவும் இருக்கிறது. அதனால்தான் இந்தக் கவிதையை Lighter poetry என்று சொல்ல முடிகிறது.  

இரண்டு பத்திகளுக்கு முன்பாக மதி மண்ணின் கவிதைகள் தவிர்த்து வேறு வகைக் கவிதைகளையும் முயன்றிருக்கிறார் என்று சொன்னேன் அல்லவா? அது பற்றியும் ஓரிரு வரிகள் சொல்லிவிட விரும்புகிறேன். இத்தகைய கவிதைகள் நுட்பங்களால் ஆனவை. சொற்த்தேர்ச்சி, வரிகளின் அமைவு போன்ற கவிதையியல் பொறியியலால் ஆனவை. ஆனால் இவ்வகைக் கவிதைகளை பிரதிநிதித்துவப்படுத்தி இவரது மண்ணின் கவிதைகளை நிழலுக்கு நகர்த்திவிட விரும்பவில்லை. அவற்றை பிறிதொரு சமயத்தில் பேச விரும்புகிறேன். 

கவிதையின் நுட்பங்கள் என்று பேசினோம் அல்லவா? இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட மனம் விரும்புகிறது. கவிதையின் நுட்பங்களைப் பற்றி கவிஞன் கவலை கொள்ள வேண்டியதில்லை. கவிதையின் நுட்பங்கள் எனச் சொல்வது Poetic Engineering அல்லது Poetic Technology போன்றவற்றை. கவிதையின் நுட்பங்களை கவிஞன் தெரிந்து கொள்ளும் போது அவனது கவித்துவத்தையும் மீறி நுட்பங்கள்தான் வெளியில் பிதுங்கத் துவங்குகின்றன. கவிதையில் இருக்க வேண்டியது கவிஞனின் மனம்தானே தவிர அவனது அறிவு இல்லை. கவிஞன் ஒரு போதும் அறிவாளியாகவும் இருக்க வேண்டியதில்லை. என்னளவில் கவிஞனின் மடத்தனம்தான் படைப்பின் உச்சம். இந்தத் தொகுப்பிலிருந்து நான் புரிந்து கொள்வது மதி கவிதையின் நுட்பம் தெரியாதவராக இருந்திருக்கிறார். இது அவரது பலம். சில கவிதைகளில் 'கவிதையின் நுட்பங்கள்' என பலரால் முன்வைக்கப்பட்டிருப்பனவற்றை முயன்று பார்த்திருக்கிறார். அது அவரது பலவீனம்.  

மண்ணின் கவிதைகள் என்று சொல்லும் போது வெற்றிபெற்றவர்களின் பட்டியலில் சுயம்புலிங்கம் வருவதைப் போல தோல்வியுற்றவர்களின் பட்டியல் எடுத்தால் நிறைய கவிஞர்களை சேர்த்துவிட முடியும். பறவீரன்என்ற ஆகச்சிறந்த கவிதையை எழுதிய பழமலய் கூட பிறகு கவிதைகளில் தடம் பதிக்க முடியவில்லை. அதற்கும் காரணம் அவர் எழுதிய மண்ணின் கவிதைகள்தான். இந்த வகைக்கவிதைகளில் பயணிப்பது மிக ஆபத்தானது. மிகச் சிறந்த கவிதையாக வந்திருக்க வேண்டியவையும் கூட சில தவறுகளால் மிக தட்டையானவையாக தெரியக் கூடும். அபியின் இந்தத் தொகுப்பில் சில கவிதைகளில் இத்தகைய தோல்வியைத் தழுவியிருக்கிறார். தாத்தா (சொன்ன) கதை ஒரு உதாரணம். முனியப்ப சாமியின் வேட்டையையும் அவர் வேட்டையாண்ட மனிதர்களையும் முன்வைத்து மிகுந்த உத்வேகத்தோடு தொடங்கும் கவிதை கடைசியில் சாதாரண ஒரு தொடுப்புஉறவு பற்றிய உரையாடலாக முடிந்துவிடுகிறது. இந்தக் கவிதையை வாசிக்கும் வாசகன் தனக்கான இடம் என இந்தக் கவிதையில் எதைக் கருத முடியும் என்ற கேள்வியைக் கேட்டால் இந்தக் கவிதை தோல்வியடைந்துவிடும். கவிதை முடிந்த பிறகும் வாசகனின் சிந்தனையோட்டம் முடிந்துவிடாமல் தொடர்வதற்கான நீட்சியை கவிதை தர வேண்டும் என என் மனம் விரும்புகிறது.

இந்தக் கவிதையை சுட்டிக்காட்டியமைக்கு காரணம் மதியின் கவிதைகளில் இருக்கும் குறைபாடுகளை Expose செய்வதற்காக இல்லை. கவிதையில் வாசகனுக்கான இடம் என்பதை விளக்குவதற்காகத்தான். சிற்சில குறைகள் இல்லாத ஒரு தொகுப்பைக் கூட பார்க்க முடியாது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அந்த வகையில் இந்தத் தொகுப்பிலும் குறைகள் உண்டு. தனக்கான மொழியையும், கருவையும் கண்டடைந்துவிட்ட மதிக்கு தனது பாதை சரியானதாக இருக்கிறதா என்பதில் குழப்பம் இருந்திருக்க வேண்டும். அதனாலேயே வேறு சில வகைக் கவிதைகளையும் முயன்றிருக்கிறார். இந்தக் குழப்பங்கள் முதல் தொகுப்பில் இயற்கானவை என்றே நினைக்கிறேன். அடுத்து வரும் தொகுப்பில் இந்த குழப்பங்களை நீக்கிவிடுவார் என நம்பலாம். மற்றபடி என்னளவில் இந்தத் தொகுப்பை நல்லதொரு தொகுப்பாக முன் வைக்கிறேன்.1 comment: